
சிறுவர் - சிறுமியர் விளையாடவும், முதியோர் இளைப்பாறவும் உகந்தது ஊஞ்சல். மன அழுத்தம் தணிக்க உதவுகிறது. பழங்காலத்திலே ஊஞ்சல் பயன்படுத்தப்பட்டதாக தமிழக வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. இதை துாளி, துாரி என்றும் அழைப்பர். தமிழக கோவில்களில் ஊஞ்சல் சேவை என்ற வைபவம், இப்போதும் சிறப்புற நடத்தப்படுகிறது.
ஆலமர விழுது ஊஞ்சல், பொன் ஊஞ்சல், கயிறு ஊஞ்சல் என பலவகைகள் உள்ளன.
ஆலமர விழுது உறுதி மிக்கது. இதன் விழுதுகள், ஊஞ்சலாக மாற்றி ஆடுவதற்கு உகந்தது. மா, வேம்பு, புளிய மரங்களிலும் ஊஞ்சல் அமைத்து ஆடுவது, கிராமங்களில் வழக்கமாக உள்ளது.
பழங்காலத்தில் தங்க முலாம் பூசிய பொன்னுாஞ்சலில் மன்னர் குடும்பத்தினர் ஆடும் வழக்கம் இருந்ததாக செய்திகள் உள்ளன. மரப்பலகையில் இரும்பு சங்கிலி இணைத்து ஊஞ்சலாக்கி ஆடும் வழக்கம், இப்போதும் உள்ளது.
ஊஞ்சல் ஆட்டத்தில்...
* முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் சீராக பாயும்
* மூளை புத்துணர்வு அடையும்
* கவலை மறந்து, மனம் லேசாகும்
* கோபம் தணிந்து, இயல்பு நிலை ஏற்படும்
* நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்
* மனச்சோர்வு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.
திருமண நிகழ்வில் ஊஞ்சல் ஆடும் சடங்கு முறை, தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ளது. மரங்களுக்கு இடையில் ஊஞ்சல் கட்டி ஆடும் போது, அதிக அளவில் ஆக்சிஜனை சுவாசிக்க முடியும். இதனால், இதய இயக்கம் சீராகும். உணவுக்கு பின் சிறிது நேரம் ஊஞ்சல் ஆடினால், உணவு நன்றாக செரிக்கும். மகிழ்ச்சியை வாரி தரும் ஊஞ்சலில் இளைப்பாறி, இன்னல்களை மறப்போம்.
- எம்.பி.ராஜேஸ்வரி, சிதம்பரம்.

