
ராமேஸ்வரம், மேலத்தெரு கழக உயர்நிலைப்பள்ளியில், 1959ல், 9ம் வகுப்பு படித்தேன். கோவில் குருக்களாக பணியாற்றிய என் தந்தை, திடீரென அகால மரணம் அடைந்ததால் வறுமையில் வாடியது குடும்பம். பள்ளியில் என் படிப்பு கட்டணமாக மாதம், 5 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.
அந்த மாதம் செலுத்த இயலாததால் பள்ளி வருகை பதிவேட்டில் என் பெயர் நீக்கப்பட்டது. மீண்டும் சேர அபராதமாக, 25 காசுகள் கூடுதல் செலுத்த வேண்டும். அதற்கு இயலாததால் கோவிலில் எடுபிடி வேலைக்கு சேர்ந்தேன்.
இதை அறிந்த தமிழாசிரியர் புலவர் நாகநாதன், என் வீட்டுக்கு வந்து, 'கட்டணத்தை செலுத்தி விடுகிறேன்...' என, அம்மாவிடம் வாக்கு கொடுத்து அழைத்து சென்றார். சாஸ்திரிகள் வீட்டில் அம்மாவுக்கு சமையல்பணி வாங்கி கொடுத்தார்.
என் படிப்புக்கு அரசு உதவித் தொகை கிடைக்க வழி செய்தார் தமிழாசிரியர். அதை பயன்படுத்தி படித்து தமிழ்மன்ற தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன்.
எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் பள்ளி அளவில் முதலிடத்தில் வந்தேன். பின், அப்போதைய மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி, அரசு பணியில் சேர்ந்தேன்.
என் வயது, 83; தமிழக அரசில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின், மத்திய தொலைபேசி துறையில் சேர்ந்தேன்.
அங்கு, 38 ஆண்டுகள் பணியாற்றி அதிகாரியாக ஓய்வு பெற்று பேரன், பேத்தியருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். மொழி புலமை சிறப்பால் 12 நுால்கள் எழுதியுள்ளேன். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதும், பாராட்டும் பெற்றுள்ளேன். இந்த உயர்வுகளுக்கு அடித்தளம் போட்ட ஆசிரியர் புலவர் நாகநாதனுக்கு என் புகழ், பெருமைகளை காணிக்கையாக்கி வணங்குகிறேன்.
- ஆ.நாகராஜன், கடலுார்.
தொடர்புக்கு: 98653 54678

