PUBLISHED ON : அக் 31, 2026

அமிர்தபுரி நாட்டை ஆண்ட மன்னர் ஜம்பு, மக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். மக்களும் அவரை மிகவும் நேசித்தனர்.
அண்டை நாட்டு மன்னர்களால் இதை சகிக்க முடியவில்லை. சுந்தரபுரி மன்னர் சுந்தரம், சூழ்ச்சி செய்து ஜம்புவை தோற்கடிக்கத் திட்டமிட்டார்.
ஜம்புவின் அரசவையில் உள்ள அமைச்சர் ராமுவை அழைத்து, 'மன்னர் ஜம்புவை தனியாக காட்டுக்குள் அழைத்து வந்தால், தங்க நாணயம் பரிசாக வழங்குகிறேன்...' என்றார்.
மன்னர் ஜம்பு, வேட்டைக்கு தனியாக செல்வதே வழக்கம். அன்று, ராமுவையும் அழைத்திருந்தார். காட்டுப் பகுதியில் எதிரி அரசர் சுந்தரம் அனுப்பிய ஆட்கள், மன்னர் ஜம்புவைக் கொல்ல காத்திருந்தனர். மன்னர் ஜம்பு காட்டை அடைந்ததும் சூழ்ந்து கொண்டனர், எதிரி நாட்டு வீரர்கள்.
மன்னர் ஜம்பு, சற்றும் அதிர்ச்சியடையாமல் சிரித்தார்; அமைச்சர் ராமுவும் சேர்ந்து சிரித்தார்.
எதிரி வீரர் குழுவின் தலைவன், அதிர்ச்சி அடைந்தான். மன்னர் ஜம்பு சைகை காட்ட, அடுத்த கணமே, அமிர்தபுரி வீரர்கள் விரைந்து எதிரிகளை கைது செய்தனர்.
தொடர்ந்து மன்னர் ஜம்பு, ராமுவுடன் சுந்தரபுரி நாட்டுக்கு சென்றார்.
மன்னர் ஜம்பு வருவதை அறிந்த, சுந்தரபுரி மன்னர் சுந்தரம் எதுவும் புரியாமல், 'தண்டித்து விடுவாரோ' என அச்சத்தில் நடுங்கினார். மன்னர் ஜம்பு புன்னகைத்தபடி, 'சுந்தரம்... இன்று நீ வரம்பை மீறி விட்டாய்.
'எங்கள் நாட்டின் மீது நீ பொறாமை கொண்டிருப்பது தெரியும்; ஆனால், ஆசை காட்டி மோசம் செய்ய முயல்வது சரியான செயல் அல்ல...' என்றார்.
விபரம் அறிந்து தலை குனிந்தார் மன்னர் சுந்தரம்.
அப்போது குறுக்கிட்ட ராமு, 'சுந்தரபுரி அரசே, எனக்கு தங்க நாணயம் தருவதாக ஆசை காட்டினீர். ஆயினும், என் நாட்டுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை. அது ஏன் தெரியுமா? நாட்டை கண்ணும், கருத்துமாகப் பார்த்து கொள்கிறார் மன்னர்; அவருக்கு எப்படி துரோகம் செய்ய முடியும்...' என்றார்.
இதைக் கேட்டதும், 'இதுதான் உயர்ந்த பொறுப்பில் இருப்போர் சம்பாதிக்க வேண்டிய செல்வம். மக்களின் நன்மதிப்பே, என் வெற்றிக்கு காரணம். நீயும் மக்களுக்காக உழைத்து வாழ். அதுவே நல்லாட்சி யின் பண்பு...' என்றார், மன்னர் ஜம்பு .
தவறை உ ணர்ந்து, 'இனி நல்வழியில் இருந்து விலக மாட்டேன்...' என, உறுதியளித்தார், மன்னர் சுந்தரம். நாடுகளிடையே பகை தீர்ந்தது.
குழந்தைகளே... நல் வழியில் நடந்து மக்களைப் பேணிக் காப்பது தான் ஒரு மன்னரின் கடமை.
-வெ.அனிருத்
