PUBLISHED ON : நவ 14, 2026

விசித்திரமான பறவை இனம் காகபோ. பச்சை நிறத்தில் கிளி மற்றும் ஆந்தை போன்ற தோற்றம் உடையது. இது ஆந்தைக் கிளி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய கண்ட நாடான, நியூசிலாந்தில் காணப்படுகிறது. கருப்பு, பழுப்பு நிற புள்ளிகளுடன், இளம் பச்சை வண்ண இறகுகளை உடையது காகபோ. இதன் இறக்கை பறப்பதற்கு பயன்படுவதில்லை. சமநிலையாக நடப்பதற்கே உதவுகிறது.
ஆண் பறவை 4 கிலோ வரை எடை உடையது. பெண் பறவை 2.5 கிலோ வரை இருப்பதால், 4 மீட்டர் துாரம் வரை காற்றில் மிதந்து செல்ல முடியும். வழக்கமாக தரையை ஒட்டி தலையை குனிந்தபடி நடக்கும் இந்த பறவையின் அலகை சுற்றி, உணர் திறன் உடைய சிறப்பு இறகுகள் உள்ளன. இவை பூனையின் மீசை போல செயல்பட்டு, இரவில் சுற்றுப்புறத்தை உணர உதவுகின்றன.
மரத்தில் ஏறும் திறன் உடையது காகபோ. பகல் நேரத்தில் தரையிலோ அல்லது மர உச்சியிலோ ஓய்வெடுக்கும். ஆபத்து நெருங்கும் போது அசையாமல் ஒரே இடத்தில் நின்று விடும்; உடல் நிறத்தைப் பயன்படுத்திச் சூழலோடு ஒன்றி மறைந்து கொள்ளும். இரவில் மட்டுமே உணவு தேடும் பழக்கம் உடையது.
தாவர உண்ணி வகையைச் சேர்ந்த காகபோ இலை, தண்டு, மொட்டு, பூ, பழம், தேன், விதைகளை உண்ணும். புதிதாக முளைக்கும் தாவரங்களையும் விரும்பி உண்ணும். இலையுதிர் காலத்தில் மரப்பட்டை, கிழங்குகளை உண்ணும்.
இதன் சராசரி ஆயுட்காலம், 60 ஆண்டுகள். இயற்கையான சூழலில், 90 ஆண்டுகள் வரை வாழும் என, பறவையியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உலகில், 2011ம் ஆண்டு நிலவரப்படி இவை 200க்கும் குறைந்த அளவிலே இருந்தன. நியூசிலாந்து அரசின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையால், 2026ல், இதன் எண்ணிக்கை, 325 ஆக உயர்ந்துள்ளது.
