
திருச்சி மாவட்டம், மேலப்புதுார், புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1982ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தேர்வு முடிந்து வகுப்பாசிரியை சகுந்தலா ஆர்தர் விடைத்தாள்களை கொடுத்தார். வரலாறு மற்றும் புவியியல் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றிருந்த என்னிடம், 'உன் தோழியை பார்த்து எழுதினாயா...' என்று கேட்டார். இது மனதில் வலியை ஏற்படுத்தியது; வெட்கமாகவும் இருந்தது.
துவக்க கல்வியை தமிழ் வழியில் பயின்று இடைநிலை வகுப்பில் தான் ஆங்கில வழிக்கு மாறி இருந்தேன். இதனால் தேர்ச்சி பெறுவதே சவாலாக இருந்தது. விடுமுறை நாட்களை படிப்புக்கு ஒதுக்கியிருந்தேன். பாடநுால்களை முன்கூட்டியே வாங்கி முறையாக படித்திருந்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் சுலபமாக பெற முடிந்தது.
இதை விளக்கி வகுப்பாசிரியை சந்தேகத்தை போக்கும் வகையில், 'பெயர் வரிசைப்படி தான் தேர்வறையில் அமர்ந்து எழுதினேன். தோழி முதல் வரிசையிலும் நான் ஐந்தாம் வரிசையிலும் அமர்ந்திருந்தோம். இந்த நிலையில் அவளை பார்த்து எழுதுவது எப்படி சாத்தியம்...' என உறுதியான குரலில் பதில் அளித்தேன். அத்துடன் திருப்தி அடையாமல் முயன்று படித்து தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றேன். ஆண்டு இறுதியில் அழைத்து பாராட்டினார் வகுப்பாசிரியை.
தற்போது என் வயது 54; பொதுத்துறை நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறேன். வகுப்பறையில் என் உரிமையை நிலைநாட்ட உறுதியாக பேசிய அந்த நிகழ்வை எண்ணும் போதெல்லாம் மனம் பெருமிதம் கொள்கிறது.
- ந.மீனாட்சி, சென்னை.
தொடர்புக்கு: 99431 07697