
உலகெங்கும் முக்கிய உணவாக பயன்படுகிறது தேங்காய். இதை தரும் தென்னை மரம் வெப்பமண்டல பகுதியில் செழித்து வளர்கிறது. இதன் பழம், நார், எண்ணெய் என, அனைத்தும் பயனுள்ளது. உலகில் பல நாடுகளில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும், தோற்றத்திலும் சுவையிலும் மாறுபடுகிறது.
இந்தியாவில் கேரளா, தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் தென்னை பயிரிடப்படுகிறது. இங்கு, இளநீராகவும், உணவுக்காகவும், எண்ணெயாகவும் தேங்காய் பயன்படுகிறது. கேரளத்தில் மலபார் தேங்காய், சிறிதாக இனிப்பு சுவையுடன் இருக்கும். தமிழகம், பொள்ளாச்சியில் சாகுபடியாகும் தேங்காய் பெரிதாக, அதிக எண்ணெய் சத்துடன் இருக்கும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் பகுதிகளில் தென்னை வகைகள் மாறுபடுகின்றன. தாய்லாந்து நாட்டில், 'நாம் ஹோம்' தேங்காய், அதன் இனிப்பு மற்றும் மணத்திற்காக புகழ் பெற்றுள்ளது. இது, இளநீராகவும், இனிப்பு பண்டங்களிலும் பயன்படுகிறது. பிலிப்பைன்சில், 'டவாரி' வகை தேங்காய், சிறிதாக இருக்கும். இது அதிக எண்ணெய் சத்து உடையது.
இந்தோனேசியாவில், 'கெனரி' வகை, இளநீராக பயன்படுகிறது. ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உயரமான தென்னை காணப்படுகிறது. இது காற்று, அதிக உப்பு நீரை தாங்கும் திறன் உடையது. இதில் கடின ஓடு இருக்கும். கரீபியன் கடற்பகுதி நாடுகளான மேற்கிந்திய தீவுகள், ஜமைக்காவில் வளரும், 'மேப்பன்' தேங்காய், சற்று நீள வடிவில், இனிப்பு சுவையுடன் இருக்கும்.
உலகில் தேங்காய் வகைகள், அந்தந்த பகுதி மண்ணின் தன்மை, காலநிலை, மரபணு மாறுபாட்டை பொறுத்து வேறுபடுகின்றன. ஒவ்வொரு வகையும் உள்ளூர் உணவு, கலாசாரம், பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளவில் தேங்காய் எண்ணெய், இளநீர், பால், நார் என மக்களுக்கு பெருமளவில் உதவிவருகிறது.
-- வி.பரணிதா

