
திருவாரூர், வடபாதி மங்கலம், சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1977ல், 9ம் வகுப்பு படித்தேன். அப்போது, தமிழ் சரளமாக பேசுவதற்கும், பிழையில்லாமல் எழுதுவதற்கும் நான் மிக சிரமப்படுவேன்.
எங்கள் வகுப்பு தமிழாசிரியராக, ரெ.சண்முக வடிவேல் இருந்தார். அவர், திருக்குறள் பாடம் எடுத்தால், அதன் பொருளை மிக சுருக்கமாக, ஐந்தே நிமிடத்தில் அழகாக விளக்கி விடுவார். நகைச்சுவையாக பாடம் நடத்துவதிலும், மாணவர்களை ஒழுங்குபடுத்துவதிலும் கை தேர்ந்தவர். நான் தமிழில் பிழையில்லாமல் எழுத முடிகிறதென்றால், அவர் சொல்லிக் கொடுத்த ஒழுங்கு முறை தான் காரணம்.
அவர் வகுப்பறையில் இருந்து வெளியில் சென்று வர நேர்ந்தால், வகுப்பு தலைவனிடம், பேசுகிறவன் பெயரை எழுதி வைக்குமாறு கூறி செல்வது வழக்கம். அதே போல ஒரு நாள், அவர் வகுப்புக்கு திரும்பியதும், நான்கு - ஐந்து பேர் பேசியதாக, அவர்களின் பெயர்களை வகுப்பு தலைவன், ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்தான். ஆனால், அதில் உள்ள பெயர்களை படிக்காமல், 'நான் இல்லாத போது யார், யாரெல்லாம் பேசினீர்களோ, அத்தனை பேரும் எழுந்திருங்கள்...' என்றார்.
உடனே, தன் பெயரும் இருக்குமோ என பயந்து, 10 - 15 பேர் எழுந்து நின்றனர். 'பேசியதோ,15 பேர்; நீ எழுதி இருப்பதோ, ஐந்து பேர். ஏன் இவர்களை எழுதாமல் விட்டாய்...' என, வகுப்பு தலைவனிடம் கடிந்து கொண்டார், தமிழாசிரியர் ரெ.சண்முக வடிவேல்.
ஆசிரியர் தெளிவாக பாடம் எடுத்தாலும், வகுப்பறையில் பேசாமல், கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், அவர் மூலம் கற்றுக் கொண்டேன்.
தற்போது என் வயது, 63. தனியார் நிறுவனங்களில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். இன்றும் என் நினைவில் இருக்கும், தமிழாசிரியர் ரெ.சண்முக வடிவேலுக்கு பணிவான என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
- என்.சந்தான கிருஷ்ணன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 75980 37921

