PUBLISHED ON : அக் 03, 2026

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, கே.எல்.கே.நாயுடு உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
தமிழாசிரியராக இருந்த அ.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக பாடம் கற்பிப்பார். அன்று நடத்திய பாடத்திலிருந்து மறுநாள் கேள்வி கேட்பார். சரியாக பதில் சொல்லாதோருக்கு பிரம்படி நிச்சயம்.
உடன் படித்த ஒருவனுக்கு திக்குவாய். வருகையை பதிவு செய்யும் போதும் கூட, திணறியபடி, 'உள்ளேன் ஐயா...' என்பான். அவன் மீது பரிதாபம் கொண்டு ஆசிரியர்கள் எந்த கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், அவனிடமும் பாடத்திலிருந்து கேள்வி கேட்டு, தவறாக பதிலளிக்கும் பட்சத்தில் தண்டிப்பார் தமிழாசிரியர்.
வகுப்பில் எல்லாரும், 'அவனை விட்டு விடுங்கள்...' என கெஞ்சினாலும், 'கேள்வி கேட்கா விட்டால் படிக்க மாட்டான். கணக்கும், இலக்கணமும் புரிந்து, படித்தால் தான் இனிக்கும்; வெறுப்புடன் அணுகினால், வேப்பங்காயாக கசந்து விடும்...' என கூறுவார்.
ஒருநாள், குற்றியலுகரம் பற்றிய கேள்விக்கு, பாதி விடையை சரியாக சொன்னேன்; மீதியை பயத்தில் மறந்து விட்டேன். அதற்காக தண்டித்த போது, 'பாதியை சரியாக தானே சொன்னேன் ஐயா...' என்றேன். சிரித்தபடியே, 'கிணற்றை தாண்டு என்றால், பாதியில் நிற்கிறாய்... இப்படி நின்றால் உள்ளே தான் விழுவாய்...' என, நகைச்சுவையாக உணர்த்தினார்.
திக்கி பேசிக் கொண்டிருந்த மாற்று திறனாளி மாணவன், தமிழாசிரியர் கொடுத்த ஊக்கப் பயிற்சியால் ஆண்டு விழா பாட்டுப் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்றான். அப்போது திக்காதது பேராச்சரியம் தந்தது.
தற்போது என் வயது, 64. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். கற்பிப்பதில் கடுமையை கடைபிடித்து, மாணவர்களை ஊக்கப்படுத்திய பள்ளி தமிழாசிரியர் அ.கிருஷ்ணமூர்த்தி நினைவை போற்றுகிறேன்.
- ஆர்.ஸ்ரீகாந்தன், சென்னை. தொடர்புக்கு: 99406 95400
