தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/துறவியை சோதித்த மன்னர்!

துறவியை சோதித்த மன்னர்!

துறவியை சோதித்த மன்னர்!


PUBLISHED ON : ஜூன் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழங்காலத்தில் செல்வ வளத்துடன் இருந்தது மார்த்தாண்ட நாடு.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா... குறை ஏதும் இருக்கிறதா என்பதை அறிய விரும்பினார் மன்னர் மார்த்தாண்டம்.

அன்று மாறுவேடத்தில் நகர்வலம் சென்றார். உடன் மந்திரி மதியூகியும் இருந்தார். இரவில் மிக நிதானமாக ஒரு ஊருக்குள் நடந்தார் மன்னர்.

புதிதாக அந்த ஊருக்கு வந்திருந்த துறவியை பற்றி பேசி கொண்டிருந்தனர் மக்கள். துறவி நல்லவர் என்றனர் சிலர்; குறுக்கு வழியில் சம்பாதிக்க வேடமிட்டு வந்திருப்பதாகவும் சிலர் பேசினர்.

இதை எல்லாம் கவனித்த மன்னருக்கு உண்மையை தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

உடனே மந்திரியை அழைத்து, 'ஒரு தட்டில் விலை உயர்ந்த ஆபரணங்களை, ஒரு காவலரை எடுத்து வர சொல்லுங்கள். இன்னொரு காவலரை, சாதாரண உடை அணிந்து, துறவியை தகாத வார்த்தையால் திட்ட ஏற்பாடு செய்யுங்கள்...' என உத்தரவிட்டார் மன்னர்.

மந்திரியும் ஏற்பாடுகளை செய்தார்.

ஆபரணங்கள் நிறைந்த தட்டை ஏந்தியபடி துறவியிடம் சென்று, 'ஐயா... வெளியூரில் இருந்து வியாபாரம் செய்ய வந்தோம். நல்ல லாபம் கிடைத்தது. அதனால் அன்பளிப்பாக இந்த ஆபரணங்களை உங்களுக்கு தருகிறோம். பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்றார் மாறுவேடத்தில் இருந்த மன்னர்.

'முற்றும் துறந்த எனக்கு ஆபரணங்கள் எதற்கு... நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்...'

மன்னர் எவ்வளவு சொல்லியும், வாங்க மறுத்து விட்டார் துறவி.

பின், சாதாரண உடையிலிருந்த காவலருக்கு சைகை செய்தார் மன்னர்.

அந்த காவலர், துறவியிடம், 'மக்களை ஏமாற்றி அறியாமையை பயன்படுத்தி சம்பாதிக்க நினைக்கும் உங்களுக்கு நரகம் தான் கிடைக்கும்...' என்று தகாத வார்த்தைகளால் பேசினார்.

எந்த சலனமும் இன்றி, அமைதியாக புன்னகைத்தார் துறவி.

மன்னர் ஜாடை செய்ததும், அந்த இடத்தை விட்டு சென்றார் காவலர்.

மீண்டும் துறவியிடம் சென்று, 'ஐயா... அந்த ஆள் மோசமாக பேசிய போதும் உங்களுக்கு கோபம் வரவில்லையே...' என்று கேட்டார் மன்னர்.

'நீங்கள் எனக்கு ஆபரணங்களை கொடுத்தீர்கள்; மறுத்து விட்டேன். இப்போது அந்த ஆபரணங்கள் யாரிடம் இருக்கிறது...'

'என்னிடம் தான் இருக்கின்றன...'

'அவை உங்களிடம் தானே இருக்கின்றன... அதுபோல தான் சற்று முன் தவறாக பேசிய நண்பரின் வசவுகளையும் நான் ஏற்கவில்லை. அவை அந்த நண்பரிடம் தான் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது நான் ஏன் கோபப்பட வேண்டும்... பொறுமையுடன் இருந்தால் நன்மையே உண்டாகும்...' என்றார் துறவி.

மிகுந்த பணிவுடன் கைகூப்பி தொழுது தலைகுனிந்தார் மன்னர்.

ஆசிர்வாதம் செய்தார் துறவி.

பட்டூஸ்... பொறுமையுடன் இருந்தால் வாழ்வில் வெல்லலாம்.

- எம்.கதிர்வேல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us