
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1949ல் எஸ்.எஸ்.எல்.சி.,படித்தேன். தலைமையாசிரியர் டி.சி.இஸ்ரேல், கையில் பிரம்புடன் காணப்படுவார். விளையாட்டில் ஆர்வம் உடையவர்.
மாலை 5:00 மணிக்கு எல்லாரும் மைதானத்தில் இருக்க வேண்டும். தொடர்ந்து, 6:00 மணி வரை பயிற்சி மேற்கொள்வதை கண்காணிப்பார்.
விடுதியில் தங்கியிருந்த நான் ஒருநாள் மாலை மைதானத்துக்கு செல்லாமல் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தேன். திடீரென்று அங்கு வந்தார் தலைமையாசிரியர். பயந்து நடுங்கி விட்டோம். எதிர்பார்த்தபடி அன்று அடித்து தண்டிக்கவில்லை. நுாதனமாக, 'விடுதியில் மூன்று நாட்கள் நின்றுகொண்டே சாப்பிட வேண்டும்' என உத்தரவிட்டார்.
மற்ற மாணவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவர். நாங்கள் நின்றபடி உண்டோம். இது அவமரியாதையாக இருந்தது. அது முதல் தவறான பழக்கத்தை விட்டொழித்தேன். பள்ளி படிப்பை முடித்து ஆசிரியர் பயற்சியில் சேர்ந்தேன். அப்போதும் மைதானத்தில் விளையாடும் வழக்கத்தை கைவிடாமல் உடலை உறுதியாக்கினேன்.
இப்போது எனக்கு, 92 வயதாகிறது. காரைக்குடி அமராவதி புதுார் குருகுலம் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தவறாது உடற் பயிற்சி செய்வதால் நலத்துடன் வாழ்கிறேன். இந்த ஒழுங்கை கற்பித்த தலைமையாசிரியர் டி.சி.இஸ்ரேலை போற்றுகிறேன்.
- வி.பதஞ்சலி, காரைக்குடி. தொடர்புக்கு: 94878 91274