
திருப்பத்துார் மாவட்டம், நிம்மியம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், 1998ல், 6ம் வகுப்பு சேர்ந்தேன்.
உடல்நிலை பாதித்து என் தந்தை உயிரிழந்ததால், வசதியாக வாழ்ந்த எங்கள் குடும்பம் வறுமையில் தவித்தது. என் அம்மா வேலைக்கு சென்று, வீட்டு செலவை பார்த்துக் கொண்டார். ரேஷன் அரிசியில் சமைக்கும் உணவு பிடிக்காமல், பல நாள் உணவை வீணடித்து வந்தேன். பள்ளியில் வழங்கிய மதிய உணவை, என்னைப் போலவே மேலும் சிலரும் வீணாக்கி வந்தனர்.
இதை அறிந்து, எங்களின் அறிவியல் ஆசிரியர் பாண்டியன் வருந்தினார். வகுப்புகளில் பாடத்தை கற்பிப்பதோடு, வாழ்வியலையும் மாணவர்களுக்கு போதித்தார். நம் நாட்டில் 1960களில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தைப் பற்றியும், அப்போது மக்கள் பட்ட துயரத்தையும் விரிவாக எடுத்துக் கூறினார்.
'மக்கள் பெருக்கத்தால் உணவு பற்றாக்குறை நிலை உருவாகும். ஆகவே, உணவை வீணாக்கக் கூடாது' என்று, அறிவுரை கூறினார். 'உணவு சுவைக்காக மட்டுமானது இல்லை; உடல் ஆரோக்கியத்திற்காக சத்தான உணவு சாப்பிட வேண்டும்' என்று கூறி, கிராமங்களில் எளிதில் கிடைக்கும் காய்கறி, கீரைகளின் நன்மை குறித்தும் விளக்கினார்.
இப்போது என் வயது, 38. அறிவியல் ஆசிரியர் பாண்டியனின் பொன்னான அறிவுரைகளை இன்று வரை நான் பின்பற்றி வருவதால், என் உடல் ஆரோக்கியமாக உள்ளது. உணவு சாப்பிடும் போதெல்லாம், ஆசிரியர் பாண்டியனின் போதனை நினைவுக்கு வருகிறது. அவரை போற்றி வணங்குகிறேன்.
- வி.அரவிந்த், வாணியம்பாடி.
தொடர்புக்கு: 98405 24494

