PUBLISHED ON : செப் 19, 2026

பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பினாள், முதல் வகுப்பு படிக்கும் பூஜா.
''ஏய் பூஜா சாப்பாடு முழுதும் சாப்பிட்டாயா, இல்லையா...''
கோபமும், அதட்டலுமாக, சமையல் அறையில் இருந்தபடி கேட்டார் அம்மா.
''அம்மா... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நவீன் என்னை கிள்ளிட்டான்...'' என, பேச்சை மாற்றினாள், பூஜா.
''நீ சாப்பிட்டியா... இல்லை எப்போதும் போல திருப்பி கொண்டு வந்துட்டியா...''
மறுபடியும் கேட்டவாறு அம்மா, டிபன் பாக்சை கையில் எடுக்க, அது கனமாக இருந்தது. பூஜாவை அடிக்க முயன்றார், அம்மா; பயந்து அப்பாவை இறுக கட்டிக் கொண்டாள், பூஜா.
''சாப்பாட்டை அப்படியே கொண்டு வந்து விடுகிறாள். நீங்க செல்லம் கொடுக்காம கொஞ்சம் கண்டிச்சு சொல்லுங்க...'' என, கோபமாக கூறி, சமையலறைக்குள் நுழைந்தார், அம்மா. அப்பா சொல்லும் போது, நல்ல பிள்ளையாக தலையாட்டும் பூஜா, பழையபடி சாப்பாட்டை திருப்பி எடுத்து வர ஆரம்பித்தாள். செரிமானம் ஆகாத பொருட்களை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். சில சமயங்களில், சாப்பாட்டை கீழே போட்டு விட்டு, சாப்பிட்டதாக பொய் கூறினாள்.
ஒரு நாள் -
வீட்டிற்குள் நுழைந்ததும், ''அம்மா... இன்று பள்ளியில் என்ன நடந்தது தெரியுமா... என் பிரண்ட் ஹரிணி, திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். அவங்க அப்பா, மருத்துவரிடம் காட்டியதற்கு, 'தண்ணீர் நிறைய குடிக்கணும்... நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிடணும். எளிதில் செரிமானம் ஆகாத தின்பண்டங்களை சாப்பிட கூடாது. வெயில் காலம் என்பதால், மிகவும் எச்சரிக்கையாக இருக்கணும்'ன்னு, சொன்னாங்களாம்...'' என்றாள் பூஜா.
அம்மாவுக்கு தெரியாமல் வீட்டில் இருந்து எடுத்து சென்றிருந்த மிட்டாய்களை எடுத்து, மேசையில் வைத்தாள்.
பின், அம்மாவை கட்டி அணைத்தபடி, ''நீங்க கொடுக்கும் எந்த உணவையும் ஒதுக்காமல் சாப்பிடுவேன்...'' என்று, உறுதி கூறினாள், பூஜா.
கல்வியை சிறப்பாக கற்க உணவும் முக்கியம். சத்துள்ள உணவுகளால் குறைபாடுகளையும் எளிதில் விரட்டி விடலாம்.
பட்டூஸ்... சத்தான உணவுகளை வீண் செய்யாமல் உண்போம். நோயிலிருந்து காத்துக் கொள்வோம்!
சு. பிரபாகர்
