
பங்களா முகப்பில் இருந்தது கிளிக்கூண்டு. அதில், வண்ணக் கிளி ஒன்று அடைபட்டு இருந்தது.
கூண்டுக்குள் சுவையான உணவுகள் இருந்தன. கிண்ணத்தில் தண்ணீரும் நிரம்பியிருந்தது. அருகில் அழகிய ஊஞ்சல் போடப்பட்டு இருந்தது.
அதில் ஆடிய கிளி, தன்னை அழகு என எண்ணி கர்வம் கொண்டிருந்தது.
பங்களா அருகே ஒரு வேப்ப மரம் இருந்தது. அதில் கூடு கட்டி குஞ்சுகளுடன் வாழ்ந்தது காகம்.
கூண்டுக்குள் அடைபட்டிருந்த கிளிக்கு காகத்தை பிடிக்காது. அதன் நிறத்தை சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது.
அன்று, விலங்கு மற்றும் பறவைகள் ஆதார் கார்டு பெற புகைப்படம் எடுக்க புறப்பட்டன.
அதற்காக, பவுடர் பூசியிருந்தது காகம். அதிவேகத்துடன் பறந்ததால் வியர்வை பெருகி அதில் கரைந்தது பவுடர். காகத்தின் உடலில் திட்டுத்திட்டாக படிந்து இருந்தது.
அதைக் கண்டதும், 'உன்னை கண்டால் எல்லாரும் முகம் சுளிக்கின்றனர்; உன் நிறம் அப்படிப்பட்டது. கடலை மாவில் விழுந்த கரப்பான் போல பவுடர் பூச்சு வேறு தேவையா... என்னை பார்... பச்சை நிறத்தில் சிவந்த மூக்குடன் எவ்வளவு அழகாக உள்ளேன்...' என, பெருமை பேசியது கிளி.
இதை கேட்டு மனம் வருந்தியது காகம். ஆனால் மனம் தளரவில்லை. நம்பிக்கையுடன் செயல்பட்டது. கூண்டில் அடைபட்டிருக்கும் கிளிக்கு, தக்க பாடம் புகட்ட எண்ணியது.
அன்று கிளிக் கூண்டருகே வந்து, 'அழகாக இருந்து என்ன பயன்; உன்னால் ஆதார் கார்டு பெறக்கூட முடியவில்லை. என்னை பார்... விருப்பம் போல் பறக்கிறேன். ஆதார் கார்டு வாங்கி என் இருப்பை நிலைநாட்டி உள்ளேன்...' என்றது காகம்.
சி றிது நேரத்தில் -
விலங்குகளின் ஆதார் அட்டையை சரி பார்க்கும் அதிகாரியான குள்ளநரி அங்கு வந்தது.
அது, காகத்தின் ஆதார் கார்டை சரி பார்த்து பாராட்டியது.
பின் கூண்டில் இருந்த கிளியிடம், 'ஆதார் கார்டு இருக்கிறதா...' என கேட்டது.
புரியாமல் திருதிருவென விழித்தது கிளி.
'விரைவில் ஆதார் பதிவு செய்து விட வேண்டும்...'
அறிவுறுத்தி நகர்ந்தது குள்ளநரி.
'அழகாய் இருந்து என்ன பயன்; கூண்டில் அடைபட்டு அடிமையாக வாழ்கிறேன். சுதந்திரமாக வாழும் காகத்தை கேலி பேசியது தவறு' என, வருந்திய கிளி மனம் தெளிந்து திருந்தியது.
பட்டூஸ்... யாரையும் ஏளனமாய் எண்ணக்கூடாது!
வி.சி.கிருஷ்ணரத்னம்