PUBLISHED ON : செப் 05, 2026

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், குப்பச்சிப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில், 1970ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி அறிவிப்பு, அன்று வெளியாகியிருந்தது. அதில் பங்கேற்க என்னை அறிவுறுத்தினார், தலைமை ஆசிரியர் சி.சுப்பிரமணியம். அதற்காக தக்க பயிற்சிகள் தந்து ஊக்கம் கொடுத்தார். அதைப் பின்பற்றி கடுமையாக உழைத்தேன். தொடர்ந்து பயிற்சிகள் செய்து, போட்டிக்கு தயாரானேன்.
அன்று போட்டியில் பேசுவதற்காக, மேடையில் இருந்து ஒலிவாங்கி முன் சென்று நின்றேன். என் உயரம் குறைவாக இருந்ததால், அதில் பேச இயலவில்லை. செய்வதறியாது ஏமாற்றத்துடன் நின்றிருந்தேன்.
உடனே, சுறுசுறுப்பாக செயல்பட்டார் தலைமை ஆசிரியர். ஒரு ஸ்டூல் கொண்டு வர ஏற்பாடு செய்து, அதில் என்னை ஏற்றி பேச வைத்தார்; கவனம் செலுத்தி தெளிவாக பேசி, வெற்றி பெற்றேன்.
என் வயது, 66. தமிழக கூட்டுறவுத் துறையில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். பள்ளியில் பெற்ற பேச்சு பயிற்சியால் கல்லுாரியில் படித்த நாட்களிலும், கூட்டுறவு அதிகாரியாக பணியாற்றிய காலத்திலும், பல மேடைகளில் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. பல நாடுகளுக்கு விமானத்தில் சென்று, சான்றோர் முன் உரையாற்றி உள்ளேன். பள்ளியில் தலைமை ஆசிரியர் சி.சுப்பிரமணியம் ஸ்டூலில் ஏற்றியதால் தான் இந்த வாய்ப்புகள் கிடைத்துள்ளன. உயர்விற்கு வழிகாட்டியவரை போற்றி வாழ்கிறேன்.
- கே.எம்.இளங்கோ, சென்னை.
தொடர்புக்கு: 85250 82821
