PUBLISHED ON : அக் 04, 2025

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை மடியில், 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, பூக்களின் பள்ளத்தாக்கு. இயற்கையின் அற்புத களஞ்சியமாக விளங்குகிறது. யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, பிரிமுலா, ஆர்க்கிட், அனிமோன் போன்ற மலர்கள் வெவ்வேறு நிறங்களில் பூத்து, வண்ண ஓவியம் போல காட்சியளிக்கின்றன. இது சுற்றுலா பயணியருக்கு கண்கொள்ளா காட்சியாக அமைகிறது.
மஞ்சள், இளஞ்சிவப்பு, வெண்மை நிறங்களில் ஜொலிக்கும் அல்பைன் மலர்கள், பயணியர் மனதை கொள்ளை கொள்கின்றன. அரிய மூலிகைகளும் இங்கு செழித்து வளர்கின்றன. பனிமூடிய மலைச்சிகரங்களுக்கு மத்தியில், பசுமை புல்வெளியும், குளிர்ந்த நீரோடைகளும் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன.
இங்கு, பனிச்சிறுத்தை, மஸ்க் மான், இமாலய கரடி போன்ற அரிய விலங்குகள் பரவசப்படுத்துகின்றன. பறவைகள் பாடும் இனிய ஒலியும், மலைகளில் எதிரொலிக்கும் காற்றின் மென்மையும் அமைதியை தேடுவோருக்கு ஆறுதல் தருகின்றன.
இந்தப் பள்ளத்தாக்கை அடைய, நந்தா தேவி உயிர்க்கோள மையத்தைக் கடந்து, கரடுமுரடான பாதைகளில் செல்ல வேண்டும். இந்த பயணம், சாகச விரும்பிகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தரும். இங்கு புஷ்பவாடி என்ற கிராமத்தில் தங்கி, உள்ளூர் மக்களின் எளிய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம். மின்சார வசதி குறைவு என்பதால், இயற்கையுடன் முழுமையாக இணைய முடியும். மழைக்காலத்தில், மூடுபனி, மேகங்களுக்கு மத்தியில், இந்தப் பள்ளத்தாக்கு மாயாஜாலமாக மாறும். பயணியர் இயற்கை அழகை ரசிக்கவும், தியானத்துக்கான அமைதி சூழலை அனுபவிக்கவும் இங்கு வருகின்றனர்.
இந்த பள்ளத்தாக்கு, இந்தியாவின் இயற்கை பொக்கிஷங்களில் ஒன்றாக உள்ளது. உலகெங்கும் உள்ள பயணியரை ஈர்க்கிறது. இங்கு, ஒவ்வொரு பருவமும், வெவ்வேறு அழகை வெளிப்படுத்தும். கோடை காலத்தில் பசுமை நிறைந்து, மலர்கள் மலர, குளிர்காலத்தில் பனி மூடி கனவுலகமாக மாறும். இயற்கையை நேசிப்போர், இந்த பள்ளத்தாக்கில் இனிமை பெறலாம்.
- வி.சுரேஷ்