
இந்தியாவின் தேசியப் பாடல், 'வந்தே மாதரம்...' என, துவங்குகிறது. இதை, வங்காள எழுத்தாளர், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதினார். அவர் எழுதிய, 'ஆனந்த மடம்' நாவலின் ஒரு பகுதியாக, இந்த பாடல் அமைந்திருந்தது.
'தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்' என்பதே இப்பாடலின் பிரதான பொருள். ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான, விடுதலை முழக்கமாக இந்த பாடல் அமைந்தது.
கொல்கத்தாவில், 1896ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், பிரபல கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைப்பில், முதன் முதலாக 'வந்தே மாதரம்' பாடப்பட்டது.
இப்பாடலை பொது இடங்களில் பாடுவதற்கு, ஆங்கிலேய அரசு தடை விதித்தது. தடையை மீறியோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி எழுதிய எல்லா கடிதங்களிலும், அதன் தலைப்பில், 'வந்தே மாதரம்' என, குறிப்பிட்டார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர் அரவிந்தர், 'வந்தே மாதரம் என்பது, நாட்டுப் பற்றை உருவாக்கும் மந்திரச் சொல்' என, புகழ்ந்தார்.
நம் நாட்டில், 'ஜன- கண- மன' என துவங்கும் தேசிய கீதத்துக்கு சமமான அந்தஸ்தை, 'வந்தே மாதரம்' பாடல் பெற்றுள்ளது. இது, தேசியப் பாடலாக, 1950, ஜன., 24ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் ஜனாதிபதி, ராஜேந்திர பிரசாத் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
- நிகி

