தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வருகிறான் கிருஷ்ணன்!

வருகிறான் கிருஷ்ணன்!

வருகிறான் கிருஷ்ணன்!


PUBLISHED ON : ஆக 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணரின் பிறந்த நாளை, கோகுலாஷ்டமி என்று சொல்வர். தேவகி - வசுதேவர் தம்பதிக்கு எட்டாவது பிள்ளையாக பிறந்தார் கிருஷ்ணர். அவர் பிறந்தது ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம். அதாவது பவுர்ணமிக்கு அடுத்த எட்டாவது நாள். இன்றைய உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் பிறந்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த போது, இந்த பகுதி, சூரசேன நாடு என அழைக்கப்பட்டது.

சூரசேனன் என்ற மன்னர் இந்தப் பகுதியை ஆண்டு வந்தார். இவரது மகன் கம்சன். அரச குலத்தில் பிறந்தாலும், அரக்க குணம் கொண்டவன். ஆனாலும், தன் பெரியப்பா தேவகரின் மகள், தேவகி மீது தீராத பாசம் கொண்டிருந்தான். தங்கையின் திருமணத்தை முன்னின்று நடத்தினான். ஆனால், விதிவசத்தால் அவளுக்கு பிறக்கப் போகும் எட்டாவது ஆண் குழந்தையால் கொல்லப்படுவோம் என தெரிந்ததும், அவளையும், அவளது கணவரையும் சிறையில் அடைத்து விட்டான்.

ஒரு வழியாக ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என தெரிந்தும், பயத்தில் ஏழு பேரையும் கொன்று விட்டான். எட்டாவது பிள்ளை தான் கிருஷ்ணர். அவர் சங்கு, சக்கரம், வைர கிரீடம், வைடூரிய அணிகலன்கள் அணிந்தே பிறந்தார்.

பெற்றோரிடம், 'திருமாலாகிய நான், உங்கள் பிள்ளையாக பிறந்துள்ளேன். உலகில் அநியாயக்காரர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களை களையெடுப்பதே என் நோக்கம். கம்சனால் நான் கொல்லப்பட்டு விடுவேனோ என, நீங்கள் பயப்பட வேண்டாம். இப்போதே என்னை யமுனை ஆற்றின் மறுகரையில் வசிக்கும், உங்கள் நண்பரான நந்தகோபரிடம் விட்டு விடுங்கள். அவரது மனைவி யசோதை, வளர்ப்புத் தாயாக இருந்து என்னை கவனித்துக் கொள்வாள்...' என்றார் கிருஷ்ணர்.

பின், ஆபரணங்களை களைந்து, சாதாரண குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டார். இதனால் தான், கோகுலாஷ்டமியில் குழந்தைகளை நகைகள், பட்டாடைகளால் அலங்கரிக்கின்றனர்.

வசுதேவரும் மகன் சொன்னபடியே செய்தார். தேய்பிறை அஷ்டமியன்று கோகுலத்துக்கு கிருஷ்ணர் சென்றதால், இந்த நாள் கோகுலாஷ்டமி எனப்பட்டது. இதே நாளில் நந்தகோபருக்கும், யசோதைக்கும் பிறந்த பெண் குழந்தையான மாயா என்பவளை மதுராவுக்கு கொண்டு வந்து, தங்களுக்கு எட்டாவதாக பெண் குழந்தை பிறந்ததாக, சொல்லி விட்டார், வசுதேவர். அவளை கம்சன் கொல்ல முயன்றான். துர்க்கையின் அம்சமான அவள், கம்சனிடம், 'உன்னைக் கொல்ல பிறந்தவன் வேறு இடத்துக்குப் போய் விட்டான். அவனால் உனக்கு அழிவு உறுதி...' என எச்சரித்து, மறைந்து விட்டாள்.

இப்படித்தான் கிருஷ்ணரின் பிறப்பு நிகழ்ந்தது. இந்த நாளில், இனிப்பு, வெண்ணெய், நெய் பண்டங்கள் செய்து, அவற்றை சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us