PUBLISHED ON : ஜூலை 11, 2026

பெரம்பலுார் மாவட்டம், இலப்பைக்குடிக்காடு, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 9ம் வகுப்பு படித்தேன்.
இடைநிலை ஆசிரியராக, அதே பள்ளியில் பணியாற்றி வந்தார், என் அப்பா. அதனால் மாணவர்களிடையே தனி மதிப்பு பெற்றிருந்தேன். அன்று, பாடம் நடத்திய கணித ஆசிரியர் சேவியர், 'பின்னத்தில் கீழ் இருக்கும் எண்ணுக்கு பெயர் என்ன...' என, கேட்டார். சரியாக தெரியாமல் தடுமாற்றத்துடன், 'தொகுதி' என, கூறினேன். சிலரைத் தவிர, என் போலவே அனைவரும் கூறினர்.
தவறை திருத்தி, 'நீ நல்லாசிரியரின் மகன். உன் விடை சரியாக இருக்கும் என, நம்பியதால் மற்றவர்களும் அதையே பின்பற்றினர். இனி ஐயம் நீங்க கற்க முயற்சி செய்...' என, அறிவுறுத்தினார், கணித ஆசிரியர்.
இதையறிந்து, மீண்டும் தவறு செய்யாமல் இருக்க கூறினார், என் அப்பா. இந்த நிகழ்வு மிகவும் பாதித்தது. பின், தெளிவாக கற்கும் வழக்கத்தை கடைபிடித்தேன். தேர்வுகளில் முதன்மை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அரசு உதவித்தொகையுடன், இறுதி படிப்பை முடித்து முன்னேறினேன்.
என் வயது, 64. தனியார் நிறுவன மின்பொறியியல் பிரிவில் திட்ட இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தவறை சுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்திய கணித ஆசிரியர் சேவியருக்கு, என்றென்றும் கடமைபட்டிருக்கிறேன். அவரது வழிகாட்டுதலை மனதில் கொண்டு சேவையாற்றி வருகிறேன்.
- ரா.சீனிவாசன், சென்னை.
தொடர்புக்கு: 98406 47299
