PUBLISHED ON : ஜூன் 06, 2026

விருதுநகர் மாவட்டம், வன்னியம்பட்டி, காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில், 2007ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
அன்று உடற்கல்வி வகுப்பு நேரத்தில் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது சகமாணவன் கை கடிகாரத்தை திருடி, கால்சட்டை பையில் மறைத்து வைத்திருந்தேன்.
வகுப்பு முடிந்தவுடன் அறிவியல் ஆசிரியர் குருநாதனிடம் புகார் செய்தான் அந்த மாணவன். உடனே உடற்கல்வி ஆசிரியருடன் இணைந்து மாணவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்தார். யாருடைய முகத்தையும் பார்க்காமல் பின்புறமாக வந்து ஒவ்வொருவர் கால்சட்டை பையையும் சோதனை செய்தார் அறிவியல் ஆசிரியர். என்னிடம் இருந்து கடிகாரத்தை எடுத்தார். ஆனால், அதுபற்றி எதுவும் சொல்லவில்லை.
அனைவரிடமும் சோதனை முடிந்த பின், கடிகாரத்தை கண்டுபிடித்ததாக அறிவித்து, 'இனி யாரும் இப்படி தவறு செய்யக் கூடாது...' என எச்சரித்தார். அன்று முதல் அவரை காணும்போது குற்ற உணர்வால் தலையை கவிழ்ந்து கொள்வேன்.
காலாண்டு தேர்வு விடுமுறையில் ரேஷன் கடையில் நின்றிருந்தேன். அந்த ஆசிரியரும் வந்திருந்தார். என்னிடம் சகஜமாக பேசியதால், கடிகார திருட்டுக்காக மன்னிப்பு கேட்டேன். சிரித்தபடி, 'சோதனையிட்ட போது உன் முகத்தை நான் பார்க்கவில்லை. இப்போதும் நீ சொன்னதால் தான் தெரிகிறது...' என இயல்பாக கூறினார். கண்கள் குளமாக, 'இனி தப்பு செய்யக் கூடாது' என முடிவு செய்தேன்.
விடுமுறை முடிந்ததும் அந்த மாணவனிடம் உண்மையை கூறினேன். பதில் எதுவும் சொல்லாமல், கடிகாரத்தை என் கையில் கட்டி நட்பின் அர்த்தத்தை உணர்த்தினான். எனக்கு, 31 வயதாகிறது. சென்னை தனியார் மருத்துவமனையில் பணி செய்கிறேன். வாழ்க்கை தடம் புரளாமல் நல்வழி காட்டிய ஆசிரியர் குருநாதனை வணங்கி வாழ்கிறேன்.
- முருகேஷ் வீரா, சென்னை.
