தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெள்ளாட்டின் வெற்றி!

வெள்ளாட்டின் வெற்றி!

வெள்ளாட்டின் வெற்றி!


PUBLISHED ON : ஜூன் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டின் அருகே வசித்தார், விவசாயி. அவரது வீட்டில், ஒரு வெள்ளாடு இருந்தது.

அது, வீட்டிற்கு முன் கட்டிப் போடப்பட்டிருந்தது. பிறந்தது முதல், அதே இடத்தில் தான் வளர்ந்தது. வெளியே சென்றதே இல்லை.

அன்று -

வீட்டில் யாரும் இல்லை. வயலை கவனிக்க போய் விட்டார், விவசாயி.

கட்டியிருந்த கயிறு அறுந்ததால், அடைபட்டிருந்த வெள்ளாடு விடுதலை பெற்றது. வீட்டு வளாகத்தை சுற்றி வந்தது. பின், வெளியேறி, வேடிக்கை பார்த்தபடி புதிய உலகத்தை காணும் ஆர்வத்தில் நடந்தது.

தொலைவில் பசுமையான மலையை கண்டது, ஆடு. அதில் மரம், செடி, கொடிகள் இருந்தன. அங்கு சென்று இரையை வயிறு முட்ட தின்றது.

வயிறு நிறைந்ததும் துாக்கம் வந்தது. ஓய்வெடுக்க இடம் தேடிய ஆடு, ஒரு குகையை கண்டது. அதில் நுழைந்து படுத்து, ஓய்வெடுத்தது.

இரை தேடி சென்றிருந்த சிங்கம், எதுவும் கிடைக்காததால் களைத்து, கவலையுடன் குகைக்கு திரும்பியது.

அங்கு அன்னியர் இருப்பதை கண்டு, 'சிங்கத்தின் குகைக்கே வரக்கூடிய துணிச்சல் யாருக்கு இருக்கும்' என யோசித்தது.

பின், உள்ளே செல்லாமல் தயங்கி நின்றது, சிங்கம்.

உள்ளே, வெள்ளாடு ஒய்யாரமாக படுத்திருந்தது.

அதன் வினோத தாடியையும், பயமில்லாத இயல்பையும் பார்த்து அஞ்சியது, சிங்கம்.

ஆனாலும் தைரியத்தை வரவழைத்தபடி, 'யாரங்கே...' என, கர்ஜித்தது, சிங்கம்.

இதுவரை சிங்கத்தை பார்த்திராத வெள்ளாடுக்கு, பயம் ஏற்படவில்லை.

'முதலில், நீ யார் என்பதை சொல்...'

அதிகாரத்துடன் மறுமொழி கூறியது, வெள்ளாடு.

'நான் தான் காட்டிற்கு ராஜா. இந்த குகை எனக்கு சொந்தமானது...' என்றது சிங்கம்.

'இந்த நாட்டிற்கே சக்கரவர்த்தி நான்...' என, வெள்ளாடு, மேலும் குரலை உயர்த்தியது.

'நம்மை விட பலம் பொருந்தியவன் போல இருக்கிறதே...' என எண்ணியபடி நின்ற சிங்கம், பின், பயந்து நடுங்கி ஓடியது.

வெளியில் இருந்தபடி இதை கவனித்து கொண்டிருந்தது, முயல்.

சிங்கம் ஓடியதும், குகைக்குள் வெள்ளாடு அருகே சென்றது, முயல்.

அந்த மலையை பற்றியும், சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் குறித்தும் எடுத்துக் கூறியது.

விபரீதத்தை வெள்ளாடு உணர்ந்தது. ஆனால், தைரியத்தை கைவிடவில்லை.

வெள்ளாட்டிற்கு பயந்து ஓடிய சிங்கத்தை வழி மறித்து, 'எதற்காக இப்படி தலைதெறிக்க ஓடுகிறாய்...' என்றது, அந்த வழியாக சென்ற, குள்ளநரி.

'என் குகைக்குள் நாட்டின் சக்கரவர்த்தி புகுந்திருக்கிறார். அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா...'

எதிர் கேள்வி கேட்டது, சிங்கம்.

'சிங்கத்தின் குகையில் புகுந்திருக்கும் விலங்கை அடித்து உண்ணலாம்' என கருதிய குள்ளநரி, 'என்னோடு வாருங்கள் அரசே... அது யார், புதிதாக வந்துள்ள சக்கரவர்த்தி என்று பார்க்கலாம்...' என நம்பிக்கையூட்டி அழைத்தது.

சிங்கம் தயங்கியது. தைரியமூட்டும் வகையில் சிங்கத்தின் வாலை, தன் வாலோடு இணைத்து கட்டியது, குள்ளநரி.

பின் சிங்கத்திடம் , 'என்னை கடந்து தான் யாரும் உங்களிடம் வர முடியும்... குகையில் இருக்கும் நாட்டின் சக்கரவர்த்தியும் அதுபோல் தான் வர முடியும்...' என்றது, குள்ளநரி.

சற்று பயம் தெளிந்து, உடன் புறப்பட்டது சிங்கம்.

இரண்டும், குகையை நெருங்கின.

இதை கண்டதும் குகைக்குள் இருந்த முயல், பயந்து நடுங்கியது.

ஆனால், புத்திசாலித்தனமாக யோசித்த வெள்ளாடு, 'குள்ளநரியே... என்னிடம் வாக்கு கொடுத்தபடியே, சிங்கத்தை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விட்டாயே... பசி உயிர் போகிறது. உடனே அதை உள்ளே அனுப்பு...' என்றது.

இதைக்கேட்டதும், பதற்றத்துடன் தலைதெறிக்க ஓடியது, சிங்கம். வாலுடன் கட்டியிருந்த குள்ளநரி, சிங்கத்தின் பாய்ச்சலில் தாக்குப்பிடிக்க இயலாமல் உயிரிழந்தது.

குழந்தைகளே... பயம் கொள்ளாமல், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் வெற்றியே கிடைக்கும்.

- ஆர். உஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us