
திருவாரூர் மாவட்டம், விளக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2005ல், 5ம் வகுப்பு படித்தேன். அப்போது, தலைமை ஆசிரியராக இருந்தவர், சுவாமிநாதன்.
என்னுடைய பிறந்தநாளன்று, அவருக்கு சாக்லேட் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டவர், 'இந்தாண்டு முதல் உன் பிறந்தநாளன்று, பள்ளிக்கு ஒரு நல்ல புத்தகம் வாங்கி கொடு. ஒவ்வொரு மாணவரும் இதைச் செய்தால், நம் பள்ளிக்கு ஒரு நல்ல நுாலகம் கிடைத்து விடும்...' என்றார்.
நானும், 500 ரூபாய்க்கு, 10 புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். அவரின் அறிவுரையால், என்னைப் போலவே ஏராளமான மாணவர்களும், தங்களின் பிறந்தநாளன்று புத்தகம் வாங்கி கொடுக்க துவங்கினர்.
பள்ளியில், இரண்டாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் சேர்ந்தன. பாடப்புத்தகத்தை தவிர, பள்ளி நுாலகத்தில் சேர்ந்த புதிய புத்தகங்களை, மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தினர்.
தற்போது எனக்கு வயது, 30. இந்த பழக்கத்தை பின்பற்றி, வீட்டிலும் ஒரு நுாலகம் அமைத்துள்ளேன். ஒவ்வொரு மாதமும், ஒரு புதிய புத்தகத்தையாவது படித்து முடித்து விடுவேன். இந்த பழக்கத்தை ஏற்படுத்திய, பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
- பு.யுவதாரிணி, சென்னை. தொடர்புக்கு: 90472 05579

