
அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தான் விமலன்.
பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவனுக்கு ஆலோசனை கூறினார், விளையாட்டு ஆசிரியர். பளு துாக்கும் வீரனாக வேண்டும் என்பது, விமலனின் கனவு. தன் விருப்பத்தை விளையாட்டு ஆசிரியரிடம் தெரிவித்தான்.
அப்போது, வகுப்பு தோழன் நகுலன் அங்கு வந்தான். அவனும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உள்ளவன். ஆனால், விமலனை பார்த்து எப்போதும் பரிகாசிப்பது, அவனின் வழக்கம்.
''போயும், போயும் இவனிடம் பளு துாக்கும் போட்டி பற்றி பேசுகிறீர்களே... எலும்பு கூட்டிற்கு, தோல் போர்த்திய மாதிரி இருக்கிறான்... இவன் எப்படி பளு துாக்கப் போகிறான்...'' என, கிண்டல் செய்தான் நகுலன்.
''யாரும் முயற்சி செய்தால், நிச்சயமாக வெற்றி பெறலாம்...'' என, நம்பிக்கை ஊட்டினார் ஆசிரியர்.
ஆசிரியர் கூறியதை மனதில் கொண்டு, வீட்டிலேயே பயிற்சியை துவக்கினான், விமலன். அவனுக்கு, அப்பா உதவியாக இருந்தார்.
பளு துாக்கும் கருவியை நகர்த்த கூட, விமலனால் முடியவில்லை. வியர்த்து, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.
''நகர்த்தவே சிரமமாக இருக்கு... எப்படி பளு துாக்கி, வெற்றி பெறப் போகிறேன்...'' என்று, அப்பாவிடம் கவலையுடன் கூறினான், விமலன்.
''மனம் தளராதே... யோகாசனம் கற்றுக்கொள்; மனம் ஒருநிலைப்படும். விடாமல் ஓட்டப்பயிற்சி செய்; நன்கு பசிக்கும். அவ்வப்போது சத்தான உணவை நன்றாக மென்று சாப்பிடு... இரண்டு மாதத்தில் உன் எடையும், திறனும் கூடும்...'' என்றார், அப்பா.
அப்பா கூறியபடி, உடற்பயிற்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டான். மனதில் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் பிறந்தது.
சில நாட்களுக்குப் பின் -
விளையாட்டு ஆசிரியரை சந்தித்தான் விமலன்.
''நல்ல தெம்பு ஏற்பட்டு, உடலும் வலிமை பெற்றுள்ளது. பழக, பழக வெற்றி உன்னுடையது ஆகும்...'' என்று, விளையாட்டு ஆசிரியர் ஊக்கம் அளித்தார்.
ஆண்டு இறுதியில் நடந்த பளு துாக்கும் போட்டியில், வெற்றி பெற்று பரிசு வாங்கினான், விமலன். அடுத்தடுத்த ஆண்டுகளில், பள்ளிகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்றான்.
விமலனை கிண்டல் செய்த வகுப்பு தோழன் நகுலன், அலட்சியமாக இருந்து வந்தான். இதன் விளைவாக, விளையாட்டு போட்டிகளில் பின் தங்கினான். வெற்றிக்கு, விமலனை போன்று விடா முயற்சி தான் தேவை என்பதை உணர்ந்து, திருந்தினான்.
விமலன், அவன் மீது கோபம் கொள்ளவில்லை. மாறாக அவனுடன் நட்பு பாராட்டி, அவனுக்கும் பயிற்சி அளித்தான்.
பட்டூஸ்... விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி தரும் என்பதை, புரிந்து கொள்ளுங்கள்.
- வி.சி.கிருஷ்ணரத்னம்

