
உலகின் பழமையான குரங்கு வகைகளில் ஒன்று, செங்கால் குரங்கு. இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், கம்போடியா, லாவுஸ் நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. வியட்நாம் மொழியில், 'வூக் னுகு சாக்' என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இதற்கு, 'பஞ்சவர்ண குரங்கு' என அர்த்தம்.
இவை மிதவெப்ப மண்டலம் மற்றும் பசுமையான வெப்ப மண்டல காடுகள், கலப்பு மூங்கில் காடுகளில் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்கின்றன. பழங்கள், பூக்கள், மொட்டுகள் மற்றும் மரத்தின் பட்டைகளை உணவாக உட்கொள்ளும். தங்கள் வாழ்நாளை பெரும்பாலும் மரங்களிலேயே செலவழிக்கும். அதனால் இவற்றை தரையில் பார்ப்பது மிக அரிது.
ஆண் குரங்குகள், 8.8 கிலோ எடை, 65 செ.மீ., உயரம் உடையதாக இருக்கும். பெண் குரங்குகள் 6.6 கிலோ எடை, 60 செ.மீ., உயரத்தில் இருக்கும். இதன் வால் மட்டும், 74 செ.மீ., நீளம் இருக்கும்.
சில வகை குரங்குகளைப் போல இவற்றால், தங்கள் வால்களைப் பயன்படுத்தி மரங்களில் தொங்க முடியாது. இவை, தங்களுடைய தோள்பட்டை மற்றும் உடலை பயன்படுத்தியே மரங்களில் ஏறுகின்றன.
பிப்ரவரி முதல் ஜூன் வரை இவற்றின் இனப்பெருக்க காலம். குட்டிகள் பிறக்கும் போது சாம்பல் நிறத்தில் இருக்கும். பிறந்து, 10 மாதங்களுக்கு பின், இவை பஞ்சவர்ண நிறங்களில் மாற துவங்கும். இவற்றின் சராசரி ஆயுட்காலம், 25 ஆண்டுகள்.
இவை பெரும்பான்மையான அளவில் வேட்டையாடப்படுவதால், செங்கால் குரங்குகள் அழிவின் பட்டியலில் இருப்பதாக, 2007ல் வியட்நாம் மற்றும் லாவுஸ் நாடுகள் அறிவித்தன. இவற்றை வேட்டையாடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவற்றை காக்க உலக அளவில் தனியார் அமைப்புகளும், அரசு அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
- எம்.ஜெயலட்சுமி

