PUBLISHED ON : செப் 19, 2026

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர்மன்ற ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தார் சுந்தரராஜன்; கணித பாடமும் கற்றுத் தந்தார். எளிமையான செயல்பாடுகளால் மாணவர்களிடம் நற்பெயர் பெற்றிருந்தார். நல்வாழ்வுக்கு உதவும் தகவல்களை அவ்வப்போது கூறுவார்.
கணிதப் பாடத்தில் மிகவும் பின்தங்கியிருந்த என் மீது, சிறப்பு கவனம் செலுத்தி வந்தார். எளிய உதாரணங்களை முன் வைத்து, கணக்குகளை விளக்குவார். எண்களின் சிறப்பியல்புகளை, பழமொழிகளுடன் எடுத்துக் கூறி, மனதில் பதிய வைத்தார். சக்கரத்தின் சுற்றளவு பற்றி கற்பித்த போது, 'ஒரு சக்கரத்தின் சுற்றளவு என்பது, அது ஒருமுறை சுற்றிவரும் துாரம்...' என எடுத்துரைத்தார். அந்த சூத்திரம், பசுமரத்தாணி போல், மனதில் பதிந்து விட்டது.
தற்போது என் வயது, 78. பொள்ளாச்சி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். என் சிறப்பான கற்பித்தலை போற்றி, மாநில அரசு, நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. தேசிய அளவில் நல்லாசிரியர் விருதும், எனக்கு கிடைத்தது. வழிகாட்டியாக விளங்கி, வாழ்வில் உந்து சக்தியாக இருந்த வகுப்பாசிரியர் சுந்தரராஜன் செயல்பாடுகளை பின்பற்றியதால், இந்த சிறப்புகளை பெற முடிந்தது. அவரை போற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
- க.சண்முக சுந்தரம், கோவை. தொடர்புக்கு: 94433 37419.
