
ஜப்பானை சேர்ந்த முக்கிய வேதியியலாளராக விளங்கியவர் கிகுனே இகெடா. 'உமாமி' எனும் புதிய நற்சுவையைக் கண்டுபிடித்து, புகழ்பெற்றவர்.
இவரது ஆராய்ச்சி, உணவு அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தி, உலகளவில் சுவை புரிதலை மாற்றியமைத்தது.
கிகுனே இகெடா, 1864, அக்., 8ல், ஜப்பானின், கியோட்டோவில் பிறந்தார்.
இவர், டோக்கியோ, இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்று, ஜெர்மனியில் மேற்படிப்பு மேற்கொண்டார். பின், டோக்கியோ பல்கலைக்கழகத்தில், 1899ல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவரது ஆர்வம், உணவின் சுவையையும், அதன் வேதியியல் அடிப்படையையும் ஆய்வு செய்வதில் இருந்தது.
உமாமி எனும் புதிய சுவையை, 1908ல், இகெடா கண்டுபிடித்தார். தம் குடும்பத்துடன் உணவு உட்கொள்ளும்போது, ஜப்பானிய 'தாஷி' குழம்பில், ஒரு தனித்துவமான சுவையை உணர்ந்தார்.
இதை, ஆய்வு செய்தார். கொம்பு கடற்பாசியில் உள்ள குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருள், இந்த சுவையை உருவாக்குவதை கண்டறிந்தார். இதற்கு அவர், உமாமி எனப் பெயரிட்டார். உமாமி என்றால், நற்சுவை என பொருள்.
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு ஆகியவற்றுடன், புதிய சுவையாக உமாமி அங்கீகரிக்கப்பட்டது.
இகெடாவின் இந்த ஆராய்ச்சி, மோனோசோடியம் குளூட்டாமேட் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. உணவில், சுவையை மேம்படுத்த, இது பயன்படுத்தப்படுகிறது.
இகெடா, 1936ல் உயிரிழந்தார். ஆனால், அவரது கண்டுபிடிப்பு, உணவுத் தொழிலையும், அறிவியல் உலகையும் புரட்சிகரமாக்கியது.
இவர் கண்டுபிடித்த உமாமி சுவை, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆசிய உணவுகள் முதல் மேற்கத்திய உணவகங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.
- வி.பரணிதா.

