
மேற்கு ஐரோப்பியாவில் உள்ள பிரான்ஸ் நாட்டின், அர்கோன் காட்டில், 1918, அக்., 3ல், முதலாவது உலகப்போர் உச்சகட்டத்தில் இருந்தது. அமெரிக்காவின் கடைசி பட்டாலியனான, 77வது டிவிஷன் வீரர்கள், ஜெர்மனி படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர்.
அந்த டிவிஷனின் 550 வீரர்களில், 200 பேர் மட்டுமே, உயிரோடு இருந்தனர். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், நட்பு நாட்டு படைகளின் தாக்குதலில் பலர் இறக்கும் நிலை இருந்தது.
அப்போதுதான் போர் புறா, 'செர் அமி' தன் உயிரைப் பணயம் வைத்து, முக்கிய செய்தியுடன் வானில் பறந்தது.
அதையும் விட்டுவைக்காமல், ஜெர்மனி வீரர்கள் சுட்டு வீழ்த்த முயன்றனர். புறாவின் மீது குண்டு பாய்ந்ததில், ஒரு கால் துண்டாகி, ஒரு கண்ணின் பார்வையையும் இழந்தது. இருப்பினும், 40 கி.மீ., தொலைவில் இருந்த ராணுவ தலைமையகத்தை, 25 நிமிடங்களில் சென்றடைந்தது.
அதன் காலில் கட்டப்பட்டிருந்த சிறு குழாயில், 'நாங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம். தயவு செய்து எங்களை தாக்காதீர்; காப்பாற்றுங்கள்' என்ற, அமெரிக்க வீரர்களின் செய்தி இருந்தது. புறாவின் இந்த செயலால், 194 அமெரிக்க வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.
செர் அமி புறாவின் உயிரை காப்பாற்ற, அமெரிக்க ராணுவத்தின் டாக்டர்கள் போராடினர். ஆனாலும், சில நாட்களில் செர் அமி புறா இறந்தது. அந்த புறாவிற்கு, பிரான்ஸ் நாடு, உலகப்போரின் உயரிய, 'க்ராய் டி கெர்' என்ற, வீர பதக்கத்தை வழங்கியது .
வீர மரணமடைந்த செர் அமி புறாவின் உடல் பதப்படுத்தப்பட்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உலகப் போரில் நுாற்றுக்கணக்கான வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றிய வரலாற்று சாட்சியாக, அங்கு, செர் அமி புறாவும் வீற்றிருக்கிறது.
- வி.திருமுகில்

