
என் வயது 31; கணித பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிகிறேன். சிறுவயது முதலே சிறுவர்மலர் இதழ் மீது அலாதி மோகம். என் வீட்டில் தினமலர் நாளிதழ் வாங்குவதால், இணைப்பிதழான சிறுவர்மலர் வந்தவுடன் முதலில் படிக்கும் ஆர்வத்தில் என் அண்ணனுடன் போட்டி போடுவேன். இதழ் அட்டைப் படமும், குட்டிக் குட்டி மலர்கள் பகுதியில் குழந்தைகள் முகமும் கவர்ந்து இழுக்கின்றன.
சிறுவர்மலர் இதழில் படிக்கும் சிறுகதைகளையும், படக்கதையையும், 'உல்ட்டா' செய்து, தோழியரிடம் அள்ளி விட்டு மகிழ்ச்சி அடைவேன். புதிருக்கு விடை காண அண்ணனுடன் இணைந்து முயற்சி செய்வேன். 'மழலையர் பக்கம்!' பகுதியில் ஓவியங்களை பார்த்து நானும் அதுபோல் வரைய பயற்சி எடுப்பேன்.
தமாசுகளை அள்ளித்தரும், 'மொக்க ஜோக்ஸ்!' மிகவும் பிடிக்கும். பிறரிடம் சொல்லி சிரிக்க வைப்பேன். அறிவுக்கு விருந்தளிக்கும் கட்டுரைகளையும் தவறாது படிப்பேன். அறிவியல், பொது அறிவு செய்திகளை மிகவும் விரும்புவேன். என் ஆசிரியர் பணிக்கு சிறுவர்மலர் இதழில் படிப்பவை பேருதவியாக இருக்கின்றன. வளர்க அதன் தொண்டு.
- ரெ.கயல்விழி, தேனி.