
எ ன் வயது 58. சுயதொழில் செய்கிறேன். பொழுது போக்காக கதை, கட்டுரை, நாடகம் எழுதி வருகிறேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன். பெயர்தான் சிறுவர்மலர் தவிர, இது பெரியவர்களுக்கான தகவல், களஞ்சியமாக உள்ளது. இதை, 'பெரியவர் மலர்' எனவும் கூறலாம்.
பள்ளிப் பருவ நினைவுகளை பட்டாம் பூச்சியாய் மனதில் சிறகடிக்க வைத்து, நொடிப் பொழுதில் இளம் பருவத்திற்கு கூட்டிச் செல்கிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி.
சிந்தைக்கு விருந்தாக சிறுகதையும், அச்சத்தை அகற்றும் மருந்தாக தொடர்கதையும் விளங்குகின்றன. சிறுவர், சிறுமியர் ஓவியங்களால் அலங்கரிக்கும், 'மழலையர் பக்கம்!' வருங்கால ரவி வர்மாக்களை அடையாளம் காட்டுகிறது. படக்கதை பாடமாகவும், அறிவியல் தகவல்கள் வியப்பளிப்பதாகவும் இருக்கின்றன.
தமாசுகள் நிறைந்த, 'மொக்க ஜோக்ஸ்!' மனதை மகிழ்விக்கிறது. மனநல மருத்துவர் போல் ஆலோசனை வழங்கி, வாழ்க்கையை தெளிவுப்படுத்துகிறது, 'இளஸ் மனஸ்!' பகுதி.
எங்கள் எண்ணங்களை கண்ணாடியாக, 'வாசகர் பகுதி!' பிரதிபலிக்கிறது. 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்!' தாயன்புடன் அக்கறையாய் ஆரோக்கிய உணவை வழங்குகிறது. அட்டை, குட்டி குட்டி மலர்கள் படங்கள் வசந்தத்தை காட்டுகின்றன.
- க.ரவி, சென்னை.

