
2025ல் பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தினமலர் நாளிதழை நிறுவியவர் டி.வி.ராமசுப்பையர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தழுவிய மகாதேவர் கோவில் என்ற இடத்தில் 1908 அக்., 2ல் டி.வி.ஆர்., என அழைக்கப்படும் டி.வி.ராமசுப்பையர் பிறந்தார்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த, இன்றைய குமரி மாவட்டமான நாஞ்சில் நாட்டை, தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக, அது தொடர்பான போராட்ட செய்திகளை வெளியிடுவதற்காக தினமலர் நாளிதழை 1951 செப்டம்பர் 6ல் திருவனந்தபுரத்தில் துவக்கினார்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயப்படாமல் துணிச்சலாக நாளிதழை நடத்தினார். தமிழர்களின் போராட்டம் வெற்றி பெற்று, தமிழகத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து கன்னியாகுமரி மாவட்டமாக மாறிய பிறகு, தினமலர் நாளிதழை திருநெல்வேலிக்கு 1957 ஏப்ரல் 15ல் மாற்றினார்.
தென்மாவட்டங்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும் என முதலில் தினமலர் வாயிலாக குரல் எழுப்பியவர் டி.வி.ஆர்.,
நாட்டுப்பற்று, மக்கள் நலனே உயிர்மூச்சு என்று வாழ்ந்த 'தேசிய மாமணி' டி.வி.ஆர்., 1984 ஜூலை 21ல் காலமானார். அவரது லட்சியங்களை சுமந்து கொண்டு அவர் நிறுவிய தினமலர், தினமும் மலர்ந்து மணம் பரப்பி வருகிறது.
சென்னை, வேலுார், புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோயம்புத்துார், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், பெங்களூரு, புதுடில்லியில் இருந்து வெளியாகிறது. வாரம் தோறும் 3 இணைப்பு புத்தகங்கள், புதுப்புது பகுதிகள், புதுமையான பக்க வடிவமைப்பு என்று தமிழின் தனித்துவமிக்க நாளிதழாக தினமலர் மலர்கிறது.
'தினமலர் நாளிதழில் செய்தி வெளியானால் எனது பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும்' என்று நம்பும் லட்சக்கணக்கான வாசகர்களே அதன் பலம். தமிழ் வாசகர்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினமலர் பங்கு இருக்கிறது.
பள்ளித்தேர்வுக்கு, உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகள், அரசு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்பு கருத்தரங்குகள், தொழில் மேம்பாட்டு கருத்தரங்குகள், பெண்களின் ஆளுமை அதிகாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மனநல, உடல் நல, தன்னம்பிக்கை கருத்தரங்குகள், போட்டிகள், பரிசுகள், கொண்டாட்டங்கள் என மக்களின் அன்றாட வாழ்வியலோடு இணைந்து பயணிக்கிறது தினமலர்.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் 'லட்சிய ஆசிரியர்களை' கண்டுபிடித்து ஆண்டுதோறும் விருது வழங்கி ஊக்குவிக்கிறது. பல துறை சாதனையாளர்கள் எங்கிருந்தாலும் அடையாளங்கண்டு வெளிச்சப்படுத்துகிறது.
தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு, பண்பாடு, கலாசாரம் என்று வந்து விட்டால் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தினமலர் செய்தி வெளியிடுகிறது. தேசவிரோதிகள், பயங்கரவாதிகளை எதிர்ப்பதில், சமூகபொறுப்புணர்வோடு செய்திகளை வெளியிடுவதில் தினமலர் எப்போதும் முன்னிலையில் நிற்கிறது.
தினமலர் ஓர் அடையாளம்; தமிழ் வாசக குடும்பங்களின் வாழ்வின் அங்கம். இது பரம்பரை பரம்பரையாக படரும் பந்தம். 2025ல் 75ம் ஆண்டு பவள விழாவில் அடியெடுத்து வைத்திருக்கும் தினமலர், அதன் லட்சிய பாதையில் என்றென்றும் பயணித்துக்கொண்டே இருக்கும்.

