PUBLISHED ON : ஜன 01, 2026

துளிகள்...
ஜன. 16: விண்வெளியில் இரு செயற்கைக்கோளை ஒருங்கிணைத்து இஸ்ரோ. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப்பின் இச்சாதனை நிகழ்த்திய நான்காவது நாடானது.
பிப். 28: 'ஆதித்யா எல்1' விண்கலம் சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை (கெர்னல்) படம் பிடித்ததாக இஸ்ரோ தெரிவித்தது.
மார்ச் 13: விண்வெளியில் இரு செயற்கைக்கோளை பிரிக்கும் இஸ்ரோவின் 'ஸ்பேடெக்ஸ்' பரிசோதனை வெற்றி.
மார்ச் 15: வெளிநாட்டு செயற்கைக்கோள் ஏவியதில் 2015 - 2024ல் ரூ. 1244 கோடி வருவாய் கிடைத்தது என மத்திய அரசு அறிவிப்பு.
மார்ச் 30: மாட்டு சாணம் உள்ளிட்ட விலங்குகளின் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மார்ச் 27: உப்பு தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
ஏப். 2: உலகின் சிறிய 'பேஸ்மேக்கர்' (0.35 செ.மீ.,) கருவியை அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை கண்டுபிடித்தது.
ஏப். 14: அதிக ஆற்றல் உடைய லேசர் ஒளியை பயன்படுத்தி 'ட்ரோன்'களை செயலிழக்க செய்யும் எதிர்கால ஆயுதத்தை டி.ஆர்.டி.ஓ., (பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்) வெற்றிகரமாக பரிசோதித்தது.
ஜூலை 6: விண்வெளியில் அதிக செயற்கைக்கோள்கள் (8530) வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடம். இந்தியா வுக்கு ஏழாவது இடம் (136).
ஜூலை 13: அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய 'பார்க்கர்' விண்கலம், சூரியனை இதுவரை இல்லாத அளவில் (61 லட்சம் கி.மீ., துாரம்) நெருங்கி படம் பிடித்துள்ளது.
ஆக. 20: டி.ஆர்.டி.ஓ., நடத்திய ஒரே நேரத்தில் 5000 கி.மீ., துாரத்தில் உள்ள பல்வேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி.
ஆக. 21: 1396 ஆண்டுக்குப்பின் 'சி/2025 ஏ6 (லெமன்)' வால் நட்சத்திரம், பூமிக்கு அருகில் கடந்து சென்றது.
ஆக. 24: 'ககன்யான்' திட்டத்தில் விண்வெளி மையத்தில் இருந்து வீரர்கள் பூமிக்கு திரும்ப தேவையான பாராசூட் சோதனை வெற்றி.
ஆக. 24: உள்நாட்டில் தயாரான எதிரிகளின் ஏவுகணைகளை வானில் மறித்து அழிக்கும், வான் பாதுகாப்பு கவசம் சோதனை வெற்றி.
செப். 7: மனிதர்களிடம் நடத்திய புற்றுநோய் தடுப்பூசி சோதனை வெற்றி என ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவிப்பு.
செப். 26: 2000 கி.மீ., துார இலக்குகளை தாக்கும் 'அக்னி பிரைம்' ஏவுகணையை ரயிலில் இருந்து ஏவும் சோதனையை இந்தியா நடத்தியது.
அக். 23: '2025 பி.என்.7' எனும் விண்கல், பூமியின் இரண்டாவது நிலவு போல 2083 வரை சுற்றி வரும் என அமெரிக்காவின் 'நாசா' தெரிவித்துள்ளது.
அக். 27: அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் 'புரோ வெஸ்ட்னிக்' ஏவுகணை சோதனையை ரஷ்யா நடத்தியது.
நவ. 2: இந்தியாவின் அதிக எடைமிக்க (4400 கிலோ) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் (சி.எம்.எஸ் 3), எல்.எம்.வி., 3 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது.
டிச. 20: அமெரிக்க பெண் மிச்செல்லா 'புளு ஆர்ஜின்' விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று வந்த சக்கர நாற்காலி பயன்படுத்தும் முதல் நபர்.
டிச. 24: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்., 3 ராக்கெட்டில் அமெரிக்காவின் 'புளுபேர்ட்' செயற்கைக்கோள் (6100 கிலோ) விண்ணில் செலுத்தப்பட்டது.
286 நாட்களுக்குப்பின்...
அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஒரு வாரத்தில் திரும்பும் திட்டத்துடன் 2024 ஜூன் 7ல் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐ.எஸ்எஸ்.,) சென்றனர். ஆனால் அவர்களது 'ஸ்டார்லைனர்' விண்கலம் கோளாறால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. 286 நாட்களுக்குப்பின் 2025 மார்ச் 19ல் 'ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்' விண்கலத்தில் பூமிக்கு திரும்பினார். இவர்களுடன் அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் கோர்புனோவ் உடன் வந்தனர்.
முதல் இந்தியர்
ஜூன் 25: இந்தியா சார்பில் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு பயிற்சி பெறும் விதமாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் இந்தியராக சென்றார். அமெரிக்காவின் 'ஆக்சியம் -4' திட்டத்தின் கீழ் ஸ்பேஸ்எக்ஸ் 'க்ரூ' கிரஸ் விண்கலத்தில் அமெரிக்காவின் பெஜ்ஜி விட்சன் உட்பட 3 வீரர்களுடன் சென்றார். ஜூலை 14ல் பூமிக்கு திரும்பினார். 20 நாட்களில் 60 ஆய்வுகளில் ஈடுபட்டனர். சுபான்ஷு 7 ஆய்வுகளை செய்தார். இதற்கு முன் ராகேஷ் சர்மா (1984) விண்வெளிக்கு சென்றிருந்தார்.
நுாறாவது 'ராக்கெட்'
ஜன. 29: தரை, கடல், வான்வெளி போக்குவரத்துக்கு வழிகாட்டும் 'என்.வி.எஸ்.-02' செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., - எப்15 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது. இது 'இஸ்ரோ'வின் நுாறாவது ராக்கெட்டாக அமைந்தது.
அதிகரித்த நிலவுகள்
மார்ச் 11: 128 புதிய நிலவுகள் (துணைக்கோள்) கண்டுபிடித்ததை தொடர்ந்து சனி கோளின் மொத்த நிலவு எண்ணிக்கை 274 என உயர்ந்தது. வியாழனுக்கு 97, யுரேனஸ்க்கு 29, நெப்டியூனுக்கு 16, செவ்வாய்க்கு 2, பூமிக்கு ஒரு நிலவு உள்ளன. புதன், வெள்ளிக்கு நிலவு இல்லை.
விலை உயர்ந்த செயற்கைக்கோள்
ஜூலை 30: இந்தியாவின் 'இஸ்ரோ' - அமெரிக்காவின் 'நாசா' இணைந்து 'நிசார்' செயற்கைக்கோளை தயாரித்தன. இதற்கான செலவு ரூ.13 ஆயிரம் கோடி. இது உலகின் விலையுயர்ந்த செயற்கைக்கோள். இது ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட்டில் ஏவப்பட்டது. 12 நாளுக்கு ஒருமுறை பூமியை 'ஸ்கேன்' செய்யும். இரவு - பகல், அனைத்து காலநிலையிலும் உயர்தர '3டி' புகைப்படங்களை எடுத்து அனுப்பும். பூமியின் தரைப்பரப்பில் ஏற்படும் மாற்றம், பனிப்படலத்தின் நகர்வு, தாவரங்களின் இயக்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். எடை 2392 கிலோ.

