தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இளந்தலைமுறைக்கான தபால் நிலையம்!

இளந்தலைமுறைக்கான தபால் நிலையம்!

இளந்தலைமுறைக்கான தபால் நிலையம்!


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை, பவய் பகுதியில் உள்ள ஐ.ஐ.டி., வளாகத்தில் இந்திய தபால் துறையால் துவங்கப்பட்ட நாட்டின் முதல் இளந்தலைமுறைக்கான, 'ஜென் ஜி' தபால் நிலையம், பாரம்பரியமான அரசு அலுவலகங்கள் பற்றிய பிம்பத்தையே அடியோடு மாற்றியிருக்கிறது.

கடந்த, 1997 - 2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்தோடு இரண்டறக் கலந்தவர்களை, குளோபல் ஜெனரேஷன் - 'ஜென் ஜி' தலைமுறை என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

இந்த தலைமுறையினரை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தபால் நிலையம், வழக்கமான கார்டு, கவர் விற்கும் வெறும் கடிதப் பரிமாற்ற இடமாக மட்டுமில்லாமல், நவீன வாழ்க்கை முறை மையமாகவும் திகழ்கிறது.

இங்கு நுழைபவருக்கு, இது தபால் நிலையமா அல்லது நவீன, 'காபி ஹவுஸா' என்ற சந்தேகம் எழும் அளவிற்கு சுவர்களில் வண்ணமயமான ஓவியங்களும், கண்கவர் உட்புற வடிவமைப்புகளும் மாணவர்களைக் கவர்கின்றன.

அஞ்சல் சேவைகளைப் பெற வரும் இளைஞர்கள் அங்குள்ள, இசைப் பகுதியில், தங்களுக்குப் பிடித்த இசைக்கருவிகளை இசைத்து மகிழலாம் அல்லது சிறிய நுாலகத்தில் அமர்ந்து புத்தகம் வாசிக்கலாம். மேலும், அதிவேக இலவச, 'வை-பை' வசதியுடன் கூடிய பகுதியில் அமர்ந்து, காபி அருந்தியபடியே நண்பர்களுடன் உரையாடலாம்; தகவல் பரிமாறலாம்.

வழக்கமான ஸ்டாம்புகள், கவர்கள் மற்றும் சேமிப்புத் திட்டங்கள் போன்ற அனைத்து சேவைகளும் இங்கும் கிடைக்கும் என்றாலும், அவை அனைத்தும், 'க்யூஆர் கோடு' மற்றும் 'டிஜிட்டல்' முறையிலான நவீன வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, 'ஸ்பீடு போஸ்ட்' கட்டணத்தில், 10 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.

இ-மெயில் மற்றும் 'வாட்ஸ்-ஆப்' யுகத்தில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு, அஞ்சல் துறையின் அருமையையும், அவசியத்தையும் உணர்த்துவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

ஐ.ஐ.டி., வளாகத்தில் இருந்தாலும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய இந்த முன்னோடி தபால் நிலையம், இந்திய தபால் துறையின் ஒரு அதிநவீன அடையாளமாக உருவெடுத்துள்ளது.

மாணவர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழும் இந்த இடம், எதிர்காலத்தில் நாட்டின் பிற முக்கிய கல்வி நிறுவனங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. பழைய முறையையும், நவீன ரசனையையும் இணைக்கும் இந்த முயற்சி, தபால் துறையின் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

இது ஒரு முன்னோடி திட்டமாகும். மும்பை ஐ.ஐ.டி.,-யில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இதேபோன்ற நவீன தபால் நிலையங்களை நாட்டின் பிற முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களிலும் திறக்க, இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us