PUBLISHED ON : ஜன 11, 2026

ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்
இந்தியாவின் மகத்தான ஆன்மிக ஆசானும், இளைஞர்களின் ஒப்பற்ற வழிகாட்டியுமான, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 அன்று, நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், தேசத்தின் எதிர்காலத் துாண்களான இளைஞர்கள், விவேகானந்தரின் தொலைநோக்குச் சிந்தனைகளை உள்வாங்கி, இந்தியாவின் வலிமைக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டிய புனிதமான தினம்.
விவேகானந்தர் வெறும் துறவி அல்ல; தேசத்தின் ஆத்மாவைப் புரிந்துகொண்ட தீர்க்கதரிசி. அவர் கண்ட கனவு, உடல் வலிமையிலும், மனத் தெளிவிலும், ஆன்மிக பலத்திலும் சிறந்து விளங்கும் இளைஞர்களால் ஆன ஒரு வல்லரசு.
விவேகானந்தரின் பார்வையில், இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரே சக்தி, இளைஞர்கள் மட்டுமே. ஆனால், இந்த இளைஞர் சக்தி எப்படி இருக்க வேண்டும்?
'நீங்கள் கீதையைப் படிப்பதற்கு பதிலாக, கால்பந்து விளையாடுவதன் மூலம் விண்ணுலகை நெருங்க முடியும்...' என்று அவர் நகைச்சுவையாக கூறினார். இதற்கு பின் இருந்த ஆழமான உண்மை என்னவென்றால், வலிமையான மனதிற்கு, வலிமையான உடல் அவசியம். இளைஞர்கள் சோம்பலைத் துறந்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
அவர் எதற்கும் அஞ்சாத தைரியத்தை வலியுறுத்தினார். பயம் என்பது பலவீனம். இளைஞர்கள் மனதில் உள்ள அச்சம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை போன்ற மனத்தடைகளை உடைத்தெறிய வேண்டும். தெளிவான சிந்தனையும், உறுதியான முடிவெடுக்கும் திறனும் அவசியம்.
விவேகானந்தர், 'தொண்டு' செய்வதை வாழ்க்கை முறையாக கருதினார்.
ஒவ்வொரு இளைஞனும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின்பால் அக்கறை கொள்ள வேண்டும். ஏழைகளுக்கும், அறியாதவர்களுக்கும், பின்தங்கியவர்களுக்கும் உதவுவது கடமை அல்ல, அது நம் ஆன்மிகப் பயணத்தின் ஒரு பகுதி. நாம் இதயம் உள்ளவர்கள் என்பதற்கான தகுதி.
இன்றைய இளைஞர்கள் அதிக மதிப்பெண்களை மட்டுமே இலக்காக கொண்டு கல்வியை தொடர்கின்றனர். ஆனால், விவேகானந்தர், மனிதனை உருவாக்குவதே உண்மையான கல்வி என்று குறிப்பிட்டார்.
நமக்குத் தேவையானது, மனிதனை உருவாக்கும் கல்வி, தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வி, தன் காலில் நிற்கும் வலிமையை அளிக்கும் கல்வி.
எனவே, இந்த இளைஞர் தினத்தில், 'இளைஞர்கள் தங்களின் திறன்களை, அறிவை, நாட்டை முன்னேற்ற பயன்படுத்த வேண்டும்...' என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாகக் கொள்ளாமல், தங்கள் அறிவால் சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்; உணர்வால், இதயத்தால் மானுட சமுதாயத்துக்கு சேவை புரிய வேண்டும்.
விவேகானந்தரின் பொன்மொழிகளில் மிகவும் பிரபலமானது:
எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்!
இது, சாதாரண வாசகமல்ல; நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் எதிரொலிக்க வேண்டிய போர் முழக்கம்.
தேசிய இளைஞர் தினம், நம் இளைஞர் சக்தியை தட்டி எழுப்பும் ஒரு சந்தர்ப்பம். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை வெறுமனே மேடைகளில் முழங்காமல், நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் செயல்படுத்த வேண்டும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் பலம் கொண்ட இளைஞர் கூட்டம் உருவாகும்போது தான், பாரத நாடு உலகிற்கு வழிகாட்டியாக மாறும்.
- திருநிறைச்செல்வன்

