sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஏவி.எம்.சரவணன் சில நினைவுகள்!

/

ஏவி.எம்.சரவணன் சில நினைவுகள்!

ஏவி.எம்.சரவணன் சில நினைவுகள்!

ஏவி.எம்.சரவணன் சில நினைவுகள்!


PUBLISHED ON : டிச 21, 2025

Google News

PUBLISHED ON : டிச 21, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏ வி.எம்.சரவணனை சந்தித்து, பல பேட்டி கட்டுரைகள் எழுதிய, எஸ்.ரஜத், அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:



ஏ வி.எம். நிறுவனம், 178 திரைப்படங்களும், 50 'டிவி' தொடர்களும் தயாரித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்களின் முழு நம்பிக்கைக்கு, பாத்திரமானவர், ஏவி.எம்.சரவணன். திரைப்படத்துறைக்கு தலைவராக கருதப்பட்டவர். 'பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்', 'பிலிம் பெடரேஷன்' மற்றும் 'புரொட்யூஸர்ஸ் கில்ட்' போன்ற திரைப்பட சங்கங்களில் முக்கிய பதவிகள் வகித்தவர், ஏவி.எம்.சரவணன்.

திரையுலகில், 'ஜென்டில்மேன்' என்று அனைவராலும் போற்றப்பட்டவர். பழகுவதற்கு இனியவர், ஏவி.எம்.சரவணன்.

ஏவி.எம்.சரவணனை நான் முதல் முறையாக, மே மாதம், 1973ல், அவரது வீட்டில் சந்தித்தேன். அவர், சுற்றுலா வளர்ச்சிக்காக, 'ஹலோ மெட்ராஸ்' என்ற மாதப் பத்திரிகை நடத்தி வந்தார். தமிழகத்துக்கு வரும், சுற்றுலா பயணிகளுக்கு அதை இலவசமாக கொடுத்து வந்தார். அவரை பேட்டி எடுத்து, கட்டுரையாக்கி 'குமுதம்' இதழுக்கு அனுப்பினேன்.

ஏவி.எம்.சரவணனின் முதல் பேட்டி கட்டுரை எழுதிய பெருமை எனக்கு கிடைத்தது. பல மேடைகளில், சரவணன் இதை பெருமையாக நினைவு கூர்ந்துள்ளார்.

தினமணி கதிரில், 'நினைத்தேன், சொல்கிறேன்' என்ற தலைப்பில், 50 வாரங்கள், 'அலைகள்' என்ற தலைப்பில், சாவி இதழில், 50 வாரங்கள், தினமலர் - வாரமலர், தினமலர் தீபாவளி மலர், விகடன், விகடன் தீபாவளி மலர், கல்கி மற்றும் சக்தி விகடன் ஆகியவற்றில், சரவணனை பேட்டி எடுத்து, நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

சரவணனும், அவரது தாயார் திருமதி ராஜேஸ்வரி மெய்யப்பனும், 'ஷாப்பிங்' சென்றிருந்த போது ஒரு கடையில், 'ரஜத்' என்ற பெயரில், எச்.எம்.டி., தயாரிப்பு கைக்கடிகாரம் இருப்பதை பார்த்து, ஆச்சரியப்பட்டு அதை வாங்கி, எனக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார், சரவணன். ரஜத் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, வெள்ளி என்று அர்த்தம். மற்றொரு பிறந்த நாள் அன்று, 40 பேனாக்களை பரிசாக அளித்து, என்னை திக்குமுக்காடச் செய்தார்.

ஏவி.எம்.சரவணனைப் பற்றி நான் அறிந்த சில தகவல்கள்:

* எப்போதும் வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, வெள்ளை செருப்பு அல்லது ஷூ அணிந்து, கைகளை கட்டியவாறு தோற்றம் அளிப்பார், சரவணன்

* அவரது, 'லெட்டர் ஹெட்'டில், 'முயற்சி திருவினையாக்கும்' என்று அச்சிடப்பட்டிருக்கும். தன்னைப் பற்றி எந்த இதழில், கட்டுரையோ, துணுக்கோ வந்திருந்தால், அதை படித்து, அந்தப் பத்திரிகை ஆசிரியர் அல்லது எழுத்தாளருக்கு, 'தேங்க்யூ' என்று அச்சிட்ட, காகிதத்தில், நன்றி கடிதம் எழுதி அனுப்புவார்

* நேரம் தவறாமைக்கு மறு பெயர், ஏவி.எம்.சரவணன். எந்த நிகழ்ச்சிக்கும் நேரம் தவறாமல் சென்று விடுவார்

* வீட்டில் இருக்கும் போது, யாராவது போன் செய்தால், அவரே டெலிபோன் எடுப்பார். தெரிந்தவர்கள் பேசும்போது, அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை, 'பிரதர்!'

* நண்பர்களுக்கு வாழ்த்து கடிதங்கள் அனுப்பும்போது, அந்த கடிதத்தில் அவரது மனைவி லட்சுமி, மகன் குகன், மருமகள் நித்யா குகன் ஆகிய நால்வரும் கையெழுத்திட்டு அனுப்புவர்

* சரவணனை, 'முதலாளி' என்றே பாசத்தோடு அழைப்பார், எம்.ஜி.ஆர்., சரவணனும், எம் .ஜி.ஆரை, 'முதலாளி' என்றே அழைப்பார்

* நெருங்கிய நண்பர்களின் பிறந்தநாள், திருமண நாள் இரண்டிற்கும் தவறாமல் வாழ்த்துக் கடிதம் அனுப்பி விடுவார், சரவணன்

* 'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்பதற்கேற்ப, அவரது தந்தை ஏவி.மெய்யப்பன் ஏதாவது சொன்னால், அப்படியே பின்பற்றுவார். 'என் ஒரே ஆசை, எத்தனை பிறவி எடுத்தாலும், நான் அப்பச்சிக்கு (ஏவி.எம்) மகனாகவே பிறக்க வேண்டும் என்பது தான்...' என்று சொல்வார்

* ஏவி.எம்., நிறுவனம் தயாரித்த முதல் கலர்ப் படம், அன்பே வா . பொதுவாக, ஏவி.எம்., நிறுவனத்தில் கதையை முடிவு செய்து விட்டு, பிறகு தான் அதற்கு பொருத்தமான நடிகர், நடிகையரை தேர்வு செய்வர். முதல் முறையாக, எம்.ஜி.ஆரை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை, அன்பே வா ஏ.சி.திருலோக்சந்தரும், சரவணனும், எம்.ஜி.ஆரிடம் கதையை கூறினர். மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று, எம்.ஜி.ஆர்., கேட்க, உடனே ஒப்புக்கொண்டனர். அன்பே வா படத்துக்கு, 72 நாட்கள், 'கால்ஷீட்' கொடுத்தார், எம்.ஜி.ஆர்.,

* ஏவி.எம்., நிறுவனம் தயாரித்த மற்றொரு, 'சூப்பர் ஹிட்' திரைப்படம், விசு எழுதி, நடித்து இயக்கிய, சம்சாரம் அது மின்சாரம்.

இப்படத்துக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. டில்லியில் நடந்த அந்த பரிசளிப்பு விழாவிற்கு, விசு, அவரது சகோதரர், கிஷ்மு, அவர்களது தாயார் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் டில்லிக்கு அழைத்து சென்று, நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார், சரவணன்

* சங்கர நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், டாக்டர் பத்ரிநாத், சரவணனுக்கு நெடுநாளைய நண்பர். கண் தானம் பற்றி, மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என்று, பத்ரிநாத்திற்கு வருத்தம். இதுபற்றி, சரவணனிடம் சொல்ல, உடனே ரஜினிகாந்த் நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஒரு குறும்படம் தயாரித்து கொடுத்தார், சரவணன்

* திரைப்படத்துறையில், நான்கு தலைமுறைகளுடன் இணைந்து, பணிபுரிந்து சாதனை புரிந்திருப்பவர் இயக்குனர், எஸ்.பி.முத்துராமன். அவரது அனுபவங்களை புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார், சரவணன். விளைவு, 'ஏவி.எம்., தந்த எஸ்.பி.எம்.,' என்ற சுவாரசியமான புத்தகம் வெளியானது. எழுதியவர், ராணி மைந்தன்

* சரவணனின் மிக நெருங்கிய நண்பர், திருலோக்சந்தர். வீட்டிலிருந்து ஸ்டூடியோ செல்லும்வரை, திருலோக்குடன் மொபைல் போன் மூலம் பேசிக்கொண்டே செல்வார். திருலோக்சந்தருடன் பேசுவதற்காக தனி மொபைல் போனை வைத்திருந்தார், சரவணன்

* தினமும் விடியற்காலை 4:00 மணிக்கு, ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் பூஜையை, 'டிவி'யில் பார்ப்பது சரவணனின் பழக்கம். சென்னை அருகே உள்ள, சாய்பாபா கோவிலுக்கு வாரத்திற்கு ஒருமுறை செல்வார்

* காலையில் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி செய்யும் போது, குறிப்பிட்ட இடத்தில் நின்று, ஏழைகளுக்கு புது, 50 ரூபாய் தாளை கொடுப்பார்.

டிசம்பர், 20, 1984ல், ஏவி.எம்.சரவணனை, சென்னை நகரத்தின், 261வது ஷெரீப்பாக நியமித்தார், எம்.ஜி.ஆர்., முக்கிய வி.வி.ஐ.பி.,கள் சென்னை வரும்போது, அவர்களை வரவேற்பது, தலைவர்கள் மற்றும் சாதனையாளர்கள் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்துவது ஆகியவை ஷெரீப்புக்கு உரிய பணிகள். ஷெரீப் பதவி, ஒரு ஆண்டு காலம் என்பதால், 1985ம் ஆண்டு முடியும் போது, சரவணனை அழைத்து, 'உன் பதவிக்காலம் முடிகிறது. அடுத்த ஆண்டும் நீங்க தான், ஷெரீப் ஆக இருக்கணும்...' என்றார், எம்.ஜி.ஆர்., 'முதலாளி, நான் ஒண்ணும் பெரிசாக செய்து விடவில்லை. எனக்கு ஏன், பதவி நீட்டிப்பு தர்றீங்க?' என்றிருக்கிறார், சரவணன். 'இன்னும் நிறைய செய்யணும்ன்னு தான் மீண்டும் பதவி தருகிறேன்...' என்று கூறியுள்ளார், எம்.ஜி.ஆர்.,

எஸ்.ரஜத்






      Dinamalar
      Follow us