/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பூமியின் சுழற்சியை பாதிக்கும், சீன அணை!
/
பூமியின் சுழற்சியை பாதிக்கும், சீன அணை!
PUBLISHED ON : நவ 23, 2025

உயிர்கள் செழித்து வளர தேவையான சூழல் மற்றும் வளங்களை வாரி வழங்குகிறது, பூமி. ஆக்ஸிஜன், நீர் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் காலநிலை உள்ளிட்ட, பல்வேறு உயிரினங்களுக்கு தேவையான அனைத்தையும், தன்னகத்தே கொண்டது, பூமி.
பூமி கிரகத்தின் ஒரு முக்கிய அம்சம், அதன் சுழற்சி. பூமியானது, ஒவ்வொரு, 24 மணி நேரத்திற்கும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி, ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது.
இந்நிலையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று, இந்த சுழற்சியை பாதிக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை.
இதுகுறித்து, அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா.
நாசாவின் சமீபத்திய ஆராய்ச்சி, மானிடர்களின் பொறியியல் முன்னேற்றத்திற்கும், பூமியின் சுழற்சிக்கும் இடையிலான தொடர்பை கண்டறிந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான, சீனாவின், 'த்ரீ கோர்ஜஸ்' அணை, 40 பில்லியன் கன மீட்டர்
(1 பில்லியன் - 100 கோடி) தண்ணீரை கொண்டுள்ளது. இது, பூமியின் சுழற்சியில் சிறிது மந்த நிலையை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விளைவு மிகவும் நுட்பமானது என்றும், ஒவ்வொரு நாளும் பூமியின் சுழற்சியை, 0.06 மைக்ரோ விநாடிகள் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால், அது, பூமி கிரகத்தின் மேற்பரப்பின் எடையை மாற்றும். இந்த மாற்றம், பூமிக்கு மந்தநிலையை உருவாக்கும். முக்கியமாக, பூமத்திய ரேகையை நோக்கி அதிகமாக நகர்த்துவதோடு, பூமியின் வேகத்தையும் குறைக்கும்.
இங்கே, 0.06 மைக்ரோ விநாடிகள் என்பது முக்கியமற்றதாக தோன்றினாலும், அது இன்னும் அதிகரிக்கக் கூடும் என, தெரிவித்துள்ளார், நாசா விஞ்ஞானி பெஞ்சமின் போங் சாவ்.
'த்ரீ கோர்ஜஸ்' அணை, சீனாவிலுள்ள யாங்சே ஆற்றின் மேல், 185 மீட்டர் உயரமும், 2 கி.மீ., நீளமும் கொண்ட ஒரு பொறியியல் அற்புதம். இது, 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மற்ற நாடுகள் உற்பத்தி செய்யும் ஆற்றலை விட, இது மிகவும் அதிகம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இது செயல்படும். அதே வேளையில், பெரிய அளவிலான மனிதத் திட்டங்கள், எதிர்பாராத விதங்களில் இயற்கை அமைப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதையும், நாசாவின் ஆராய்ச்சி எச்சரிக்கிறது.
எம். முகுந்த்

