PUBLISHED ON : அக் 12, 2025

அங்கூரி ரசகுல்லா!
தேவையானவை: காய்ச்சாத பால் - அரை லிட்டர், எலுமிச்சை சாறு - ஒன்றரை மேஜைக்கரண்டி, தண்ணீர் - ஒன்றே முக்கால் கப், சர்க்கரை - ஒரு கப், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி, ரோஸ் புட் கலர் - சில துளிகள், ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, பால் திரியும் வரை தொடர்ந்து கிளறவும். இதை மெல்லிய துணியில் ஊற்றி, எலுமிச்சை வாசனை போகும் வரை நன்கு கழுவவும். பிறகு, மூட்டைக் கட்டி தண்ணீர் முழுவதும் வடியும் வரை தொங்க விடவும். இதுவே பனீர். இதை அகலமான தட்டில் போட்டு மிருதுவாகும் வரை பிசைந்து, இரண்டு சம பங்காகப் பிரிக்கவும். ஒரு பாகத்துடன் ரோஸ் புட் கலர், ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் சேர்த்து பிசையவும். மற்றொரு பாகத்தை அப்படியே வெள்ளையாக வைக்கவும். இரண்டு நிற பனீரையும் திராட்சைப்பழ அளவு உருண்டைகளாக உருட்டவும்.
மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் ரோஸ் வாட்டர், சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதில், ரோஸ் கலர் மற்றும் வெள்ளை நிற உருண்டைகளை போட்டு மூடி, 15 நிமிடம் வேக வைக்கவும். நடுநடுவே உருண்டைகள் உடைந்து விடாமல் மெதுவாக கிளறி இறக்கவும். இதைக் குளிர வைத்து, சிறிய கோப்பைகளில் சர்க்கரை பாகுடன் சேர்த்து பரிமாறவும்.
காசி அல்வா!
தேவையானவை: வெண்பூசணித் துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், நெய் - இரண்டு மேஜைக்கரண்டி, பொடித்த முந்திரி - இரண்டு தேக்கரண்டி, புட் கலர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்துாள் - இரண்டு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் நெய்விட்டு, பொடித்த முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் பூசணித்துருவலை போட்டு, அதிலுள்ள நீர் சுண்டும் வரை வதக்கவும். பின்னர், புட் கலர், சர்க்கரை மீதமுள்ள நெய்யை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். ஏலக்காய் துாள் சேர்த்து, வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது, இறக்கவும்.
தேங்கா முந்திரி பாதாம் கத்லி!
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 100 கிராம், பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய் துாள் - சிறிதளவு, நெய் - இரண்டு மேஜைக்கரண்டி.
செய்முறை: பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் உரிக்கவும். முந்திரிப் பருப்பையும் ஊற வைத்து பாதாம், முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். வாணலியில் அரைத்த விழுது, சர்க்கரை, ஏலக்காய்துாள் சேர்த்து, கெட்டியாக வரும் வரை கிளறி ஒரு தட்டில் நெய் தடவி கிளறவும். போட்டு சிறிது ஆறியவுடன் துண்டு போடவும்.
குறிப்பு: தேங்காயை மட்டும் வைத்து, பர்பியாக செய்யாமல் முந்திரி, பாதாம் சேர்த்து செய்யும் போது, ருசி கூடுதலாக இருக்கும்.
ட்ரை ப்ரூட்ஸ் லட்டு!
தேவையானவை: உலர் திராட்சை - கால் கப், நெய் - ஒரு மேஜைக்கரண்டி, கொட்டை நீக்கிய பேரீச்சை - ஒரு கப், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா கால் கப்.
செய்முறை: பாதாம், பிஸ்தா, முந்திரியைப் பொடியாக நறுக்கவும். கொட்டை இல்லாத பேரீச்சையை மிக்ஸியில் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். இதனுடன் பேரீச்சையை சேர்க்கவும். பேரீச்சையை தட்டையான கரண்டியால் நசுக்கி, தொடர்ந்து கிளறவும். நெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து, கை பொறுக்கும் சூட்டுக்கு ஆறவிட்டு, (முழுவதுமாக ஆறிவிடக்கூடாது; ஆறினால் லட்டு பிடிக்க வராது.) உடனடியாக லட்டுகளாக உருட்டவும்.
சம் சம்!
தேவையானவை: பனீர் - ஒரு கப், சர்க்கரை - ஐந்து கப், தண்ணீர் - மூன்று கப், ஆரஞ்ச் புட் கலர் - கால் தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் - அரை கப், மைதா மாவு - இரண்டு தேக்கரண்டி.
செய்முறை: பனீரில் புட் கலர், மைதா மாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து உள்ளங்கையில் வைத்து சிறிய உருளை வடிவத்தில் உருட்டவும். இந்த உருளைகளை ஒரு தட்டில் வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி தளதளவென்று கொதிக்க விடவும். அதில், சம் சம் உருளைகளை கொட்டவும். அதிக தீயில், 15 நிமிடம் பாகு நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பிறகு, இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றி, மூன்று மணி நேரம் ஆறவிடவும். ஊறிய சம் சம்களை எடுத்து, அதன் மேல் கரண்டியால் அழுத்தி அதிகப்படியான சர்க்கரைப்பாகை வெளியே எடுத்து விடவும். கொப்பரை துருவலில் புரட்டி, பரிமாறவும்.
குறிப்பு: மாவை நன்றாக பிசைவது அவசியம்.