PUBLISHED ON : அக் 19, 2025

கங்கா ஸ்நானம்: தன் முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கச் செய்வதற்காக, கடும் முயற்சி செய்து தேவலோகத்திலிருந்து கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான், பகீரதன்.
அன்று முதல் தன்னில் நீராடுபவர்களின் பாவங்களைப்போக்கி நற்கதி வழங்குகிறாள், கங்கை அன்னை.
தீபாவளித் திருநாள் அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலைகள் அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது நம்பிக்கை. இந்த ஐதீகத்தின்படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான், அன்று காலையில் நீராடுவதை, 'கங்கா ஸ்நானம் ஆச்சா?' என, கேட்பர்.
மருந்துக் குளியல்: தீபாவளி அன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை, அபயங்களம் என்பர். விடியற்காலையில் நீராடுவதால் குளிக்கும் நீரில் ஆல், அத்தி, புரசு, மாவிலங்கை போன்ற மருத்துவக் குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊற வைத்து நீராடுவது வழக்கம். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இந்த வழக்கம் கிராமப்புறங்களில் இன்றும் இருக்கிறது.
குளியல் மந்திரம்: தீபாவளி குளியலுக்கு முன், கிழக்குநோக்கி அமர்ந்து எண்ணெயைத் தலையில் பூசி, பிறகு, கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.
புத்தாடை படையல்: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புத்தாடைகளையும், பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது, முன்னோர்களுக்கு வைக்கும் படையல். அன்று, பித்ருக்கள் இல்லம் தேடி வருவதாக ஐதீகம். நரகத்தில் இருப்பவர்கள் கூட அன்று விடுதலையாகி அவரவர் வீடுகளுக்கு வருவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால்தான், நரக சதுர்த்தி என்று பெயர் ஏற்பட்டது.
அதிர்ஷ்ட வரவு: தீபாவளி நாளில் உப்பு வாங்கி வீட்டில் வைப்பது அதிர்ஷ்ட வரவாக கருதப்படுகிறது. உப்பில், மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை.
தீப ஜோதி பூஜை: தீபாவளிக்கு மறுநாள், தீபஜோதி பூஜை செய்தால் பலவித மங்களங்கள் கிடைக்கும். பூஜையறையில் தலைவாழை இலை போட்டு, அதன்மீது குத்துவிளக்கு வைத்து பூஜை செய்தால், வாழையடி வாழையாகக் குடும்பம் தழைக்கும் விதமாக மழலைச் செல்வம் கிடைக்கும். பித்தளை தாம்பாளத் தட்டில் கோலம் போட்டு, சந்தனம், குங்குமம் இட்டு, அதன்மீது குத்துவிளக்கு வைத்தும் வழிபடலாம்.
கோமாதா பூஜை: தீபாவளி நன்னாளில் கோமாதா பூஜை செய்வது அவசியம். பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.
அன்று, பசுவைக் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு, மலர் சூடி, ஏதேனும் புத்தாடை அணிவித்து பூஜை செய்வர்.
பின்பு, அதற்கு உணவாகப் பச்சரிசி கலந்த வெல்லம், வாழைப் பழங்கள் கொடுத்து வணங்கினால், லக்ஷ்மி கடாட்சம் குடும்பத்தில் நிறைந்து நிற்கும்.
ஸ்ரீதன்வந்தரி ஜெயந்தி: நோய் இல்லாது நலம் பெருகி வாழ, தன்வந்திரியை வணங்க வேண்டும். தன்வந்தரி பகவான், திருமாலின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். தன்வந்தரி ஜெயந்தி, தீபாவளிக்கு முதல்நாள் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில், அன்று தன்வந்தரியை வணங்கி நோய் விலக வேண்டுகின்றனர், பெண்கள்.
லட்சுமி வழிபாடு: தீபாவளி அன்று கங்கையும், லட்சுமியும் நம் இல்லம் நோக்கி வருகின்றனர். அன்று மட்டும் வெந்நீரில் கங்கையும், நல்லெண்ணெயில் திருமகளும் குடிகொண்டு உள்ளனர். அன்று வீடுகளின் வாசலில் அதிகாலையிலும், மாலையிலும் தீபங்கள் ஏற்றி வணங்கினால், மகாலட்சுமி நல்லருள் புரிவாள்; சுபகாரியம் நடக்கும்; செல்வம் பெருகும். அன்று, லட்சுமியைத் தாமரை மலர் கொண்டு வணங்க வேண்டும்.
குபேர பூஜை: தீபாவளிக்கு மூன்றாம் நாள் மகாலட்சுமி பூஜையும், குபேர பூஜையும் செய்வர். அன்று குபேரன் புதுபலம் பெற்று தன்னை வணங்குவோருக்கு செல்வத்தை அள்ளித் தருவான் என்பது ஐதீகம்.
அன்னபூரணி வழிபாடு: காசியில் இருக்கும் அன்னபூரணியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால், ஆண்டு முழுக்க உணவு பற்றிய கவலை இல்லத்தில் இருக்காது என்பது நம்பிக்கை.
எல்லாருக்கும் காசி சென்று அன்னபூரணியைத் தரிசிப்பது சாத்தியமில்லை. ஆதிசங்கரர் இயற்றிய அன்னபூர்ணா அஷ்டகத்தைச் சொல்லி, வீட்டிலேயே அன்னபூரணியை வழிபட்டு இதே பலனைப்பெறலாம்.
எல். ராஜ்திலக்