தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எவரெஸ்ட் சிகரம் தொட்ட, டாக்டர் பிரியா செல்வராஜ்!

எவரெஸ்ட் சிகரம் தொட்ட, டாக்டர் பிரியா செல்வராஜ்!

எவரெஸ்ட் சிகரம் தொட்ட, டாக்டர் பிரியா செல்வராஜ்!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள புகழ்பெற்ற, ஜிஜி மருத்துவமனையின் இயக்குனரும், கருத்தரிப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரியா செல்வராஜ், மே 27, 2026ல் உலகின் மிக உயர்ந்த சிகரமான, 'எவரெஸ்ட்' சிகரத்தை வெற்றிகரமாக தொட்டு, திரும்பியுள்ளார்.

மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியும், பிரபல குழந்தைப் பேறு மருத்துவருமான, கமலா செல்வராஜின் மகள் தான், டாக்டர் பிரியா. கணவர் தொழிலதிபர், மலேஷியாவில் உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

'எவரெஸ்ட்' சிகரத்தை, 52வது வயதில் அடைந்திருப்பது சாதனையான விஷயம் தான் என்றாலும், இவரை விட வயதில் மூத்த பெண்கள் பலர் இந்த சாதனையை செய்திருக்கின்றனர். அப்படியானால் டாக்டர் பிரியாவின் சாதனை என்ன? இவர் 'எவரெஸ்ட்' சிகரத்திற்கு நிகரான இமயமலையின், 'மனாஸ்லு' என்ற இன்னொரு சிகரத்திற்கு சென்று இறங்கிய உடனே, அதாவது, ஏழு மாத இடைவெளியில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதுவரை எந்த இந்திய பெண்ணும் சாதிக்காத அரிய சாதனை, இது.

கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கருத்தரிப்பு சிகிச்சை துறையில் முன்னணியில் இருந்து, ஆயிரக்கணக்கான தம்பதியருக்கு, குழந்தைப் பேறு கிடைக்க செய்தவர், டாக்டர் பிரியா.

மருத்துவமனையில் நடைபெறும் தொடர் அறுவை சிகிச்சைகள், நீண்ட பணி நேரம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் என, 'பிஸி'யாக இருக்கும் நிலையில், எப்படி மலையேற்றத்தில் சாதிக்க முடிந்தது? அதுவும் சென்னை போன்ற வெப்ப பிரதேசத்தில் வாழும் ஒருவரால், இமயமலை போன்ற பனி மலையில் இந்த சாகசம் எப்படி நிகழ்த்த முடிந்தது என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

கொரோனா பாதிப்பு இருந்த சமயத்தில், மிகுந்த மனச்சோர்வு எழுந்தது. இதற்கு தீர்வு காண விரும்பிய போது, ஏதாவது மலை வாசஸ்தலத்திற்கு சென்று வர யோசனை கூறினர், குடும்பத்தினர். சரி எங்கே போகலாம் என்று என் தேடுதலை துவங்கினேன். புகழ்பெற்ற மலையேற்ற வீரர், நிர்மல் புர்ஜா என்பவரின், 'எலைட் எக்ஸ்பெட்' நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது. அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர், அனுப் குருங் சிறந்த வழிகாட்டியாகவும், உடல் வலிமை பயிற்சியாளரான டாக்டர் சுகபிரதீப் ஆகியோரின் துணையுடனும், 'கிளிமஞ்சாரோ, எவரெஸ்ட் பேஸ் கேம்ப், லோபூசே ஈஸ்ட்' மற்றும் 'மனாஸ்லு' என, பல சிகரங்களில் ஏறியது மனதுக்கு புத்துணர்வு அளித்தது.

மலை ஏறுபவர்களின் கனவே 'எவரெஸ்ட்' சிகரத்தை தொடுவதுதான். அதற்கும் தயாரானேன்.

சென்னையை விட்டு கிளம்பியதில் இருந்து, 45 நாட்களுக்கு பிறகு தான், சென்னைக்கு திரும்ப நேரிடும். 'எவரெஸ்ட்' சிகரம் ஏறுவதற்கு முன், 'எது நடந்தாலும், நானே முழுப்பொறுப்பு!' என வீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறை உண்டு. அந்த அளவிற்கு, 'ரிஸ்க்'கான பயணம் இது.

'எவரெஸ்ட் பேஸ்' கேம்பிற்கு பிறகு எவ்வித தகவல் தொடர்பும் இருக்காது. அதன்பின், 'எவரெஸ்ட்' சிகரத்தை அடைவதற்கு, கால சூழ்நிலை சாதகமாக இருந்தால் தான் போகமுடியும். ஒரு வழியாக உச்சியை அடைந்து என் லட்சியத்தை நிலைநாட்டியபோது, கண்கள், ஆனந்த கண்ணீரால் நிறைந்தன.

'எவரெஸ்ட்' சிகரம் ஒருவரின் மன உறுதி, தீர்மானம், வலிமை ஆகிய அனைத்தையும் முழுமையாக சோதிக்கிறது. இவ்வாறு சிலிர்ப்போடு கூறிமுடித்த, டாக்டர் பிரியா, வயது என்பது வெறும் எண் தான் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.

அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இருந்தால், வாழ்க்கையின் எந்த வயதிலும் அர்த்தமுள்ள லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு, டாக்டர் பிரியா செல்வராஜின் இந்த இமயமலைச் சாதனையே சிறந்த சான்று!

அவருக்கான மெயில் முகவரி: drpriya@gghospital.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us