PUBLISHED ON : ஆக 16, 2026

ஆக.,22 - 386வது சென்னை தினம்
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் நிலத்தை, கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட்களான, பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோமான், ஆகஸ்ட் 22, 1639ல் வாங்கினர்.
அந்த இடத்தில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி, சென்னை நகரத்தை உருவாக்கினார், பிரான்சிஸ் டே. அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 22 ம் தேதி, சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், சென்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமே:
* கடந்த, 19ம் நுாற்றாண்டில் சில காலம் சென்னையில் வாழ்ந்த, வள்ளலார், அவரது பாடலில், 'தர்மமிகு சென்னை' என்று சென்னையைக் குறிப்பிட்டு பாடியுள்ளார்
* கடந்த, 17, 18 மற்றும் 19ம் நுாற்றாண்டுகளில், இப்போதிருக்கும் தீவுத்திடல் அருகில் இருக்கும், 'வார் மெமோரியல்' இடத்திற்கு, மன்மதபானம் என்று பெயர் வைத்திருந்தனர், ஆங்கிலேயர்கள். மாலை வேளைகளில், அங்கு பொழுதைக் கழிப்பது ஆங்கிலேயர்களின் வழக்கம். அப்போது, இளம் ஆண், பெண்களுக்கு இடையே காதல் மலரும். அதனால் தான், மன்மதபானம் என்றழைத்தனர்
* சென்னையில் கை ரிக்ஷா ஓடிக் கொண்டிருந்த காலத்தில், இரண்டு, 'லைசன்ஸ்'கள் வாங்க வேண்டும். ரிக்ஷா உரிமையாளருக்கு ஒரு லைசென்சும், அதை யார் இழுக்கிறார்களோ அவருக்கு ஒரு 'லைசென்சும்' கட்டாயம் வாங்க வேண்டும்
* கடந்த, 19ம் நுாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வட சென்னை பகுதியை கருப்பர் நகரம் என்று அழைப்பர், ஆங்கிலேயர்கள். அங்கு இடமில்லாததால், வசதியான இந்தியர்கள், புரசைவாக்கம் பகுதியில் குடியேறினர். இந்தியாவில் மோட்டார் கார் அறிமுகமான நேரம் அது. கார் வைத்திருந்த பெரும்பான்மையான மக்கள் புரசைவாக்கத்தில் குடியேறினர். செல்வச் செழிப்பான பகுதியாக புரசைவாக்கம் உருவானது. முதன் முதலில் சினிமாவின் ஆரம்பமே புரசைவாக்கம் தான்; கோடம்பாக்கம் அல்ல. இங்கிருந்து தான், 1918ல், காளிதாஸ் என்ற முதல் மவுனப் படத்தை எடுத்தார், நடராஜ முதலியார்
* அந்தக் காலத்தில் 'வாட்ச்' மற்றும் சுவர் கடிகாரம் எல்லாம் விலை உயர்ந்தது; சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து தான் வரணும். புரசைவாக்கத்தில், நாலு பக்கம் கடிகாரம் வைத்து ஒரு மணிக்கூண்டு கட்டினர், ஆங்கிலேயர்கள். இதை ஏராளமான மக்கள் வந்து, வேடிக்கை பார்த்து செல்வர்
* ஆசியாவிலேயே, 350 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனை இன்று வரை செயல்பாட்டில் இருப்பது, நம்ம சென்னை மாநகரிலுள்ள அரசு பொது மருத்துவமனை தான்
* மயிலாப்பூரில், 100 ஆண்டுகளாக ஒரு சமஸ்கிருத கல்லுாரி இயங்கி வருகிறது. அங்கு, டிகிரி முதல் பி.எச்.டி., வரை பயில்கின்றனர், மாணவர்கள். ஒரு சின்ன கிராமமாக உருவான மயிலாப்பூர் பகுதி, இன்று சென்னையின் ஆன்மிகம் மற்றும் கலாசார மையமாக உள்ளது.
விசித்திரமான பெயர்கள் கொண்ட சாலைகளும், தெருக்களும் மயிலாப்பூரில் இன்றும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, 'பவுடர் மில்' இரண்டாவது தெரு என்று ஒன்று இருக்கிறது. அது என்ன 'பவுடர்' என்றால், 'கன் பவுடர்!' அதே போல், கச்சேரி ரோடு என்று ஒன்று இருக்கிறது. கச்சேரி என்றால், பாட்டு கச்சேரி என்று அர்த்தம் இல்ல; 'கோர்ட்டு' அதாவது, நீதிமன்றம் என்று அர்த்தம்
* எழும் ஊர் என்பது தான், எழும்பூர் ஆனது. அக்காலத்தில், சென்னையில் உள்ள இடங்களை விட, இவ்விடம் கொஞ்சம் உயரமாக அமைந்திருந்ததும், சூரிய உதயத்தின்போது, முதன் முதலில் சூரிய ஒளி பட்ட பகுதி என்பதும் ஒரு காரணமானது
* முதலாம் உலகப் போரில், ஜெர்மன் நாட்டின் எம்டன் கப்பலிலிருந்து சென்னை மீது குண்டு வீசியது தெரிந்த விஷயம் தான். ஆனால், அதில் வெடிக்காமல் இருந்த குண்டு ஒன்று இப்போதும் சென்னை எழும்பூர், 'மியூசியத்தில்' காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது
* கடந்த 1856ல் ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஆற்காட்டிற்கு முதல் ரயில் இயக்கப்பட்டது; இது சென்னை மாகாணத்தின் ஒரே ரயில் நிலையமாக, 17 ஆண்டுகள் கோலோச்சியது. சென்னையின் முதல் ரயில் நிலையம் என்று சொல்வதை விட, தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்று சொல்வது தான் சரியானது
* முதல் உலகப் போரில் இந்தியாவில் தாக்கப்பட்ட முதல் நகரம், சென்னை தான். சென்னை நகரமானது நில அதிர்வு மண்டலம், 3ல் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூகம்பத்தால் ஏற்படும் சேதம் சென்னையில் மிதமானதாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது
* சென்னை பார்க் டவுன் பகுதியிலுள்ள, விக்டோரியா பப்ளிக் ஹாலினுள், 'ஆடிட்டோரியம்' ஒன்று இருக்கிறது. அதில், அரிச்சந்திரா நாடகத்தை பார்த்துள்ளார், காந்திஜி. பழமை வாய்ந்த இக்கட்டடம் சென்னை அடையாளங்களில் ஒன்று. அதன் பழமை மாறாமல் அப்படியே அதை இப்போது புதுப்பித்துள்ளனர்.
* இந்தியாவிலேயே, முதன் முதலில் ஆங்கிலேயர்களின் கொடி எங்கு பறந்தது என்று கேட்டால், அது நம் சென்னையில் தான். 1688ல், புனித ஜார்ஜ் கோட்டையில் பறக்க விட்டனர். பிரிட்டிஷ் கொடியை, கிழக்கிந்தியக் கம்பெனி பறக்க விடலாம்ன்னு அனுமதி அளித்தது, இங்கிலாந்து அரசு. அதை ஒரு பெரிய விழாவாகக் கொண்டாடி அப்போதைய ஆளுநர், யேல் என்பவர் புனித ஜார்ஜ் கோட்டையில் பறக்க விட்டார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வயதும், தாஜ்மஹாலோட வயதும் ஏறக்குறைய ஒன்று தான். தாஜ்மஹால் 1632ல் கட்டப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 1639ல் கட்டப்பட்டது. இடையில், ஏழு ஆண்டுக ள் தான் வித்தியாசம்
