/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கற்காகிதம்! - சீனாவின் புது கண்டுபிடிப்பு
/
கற்காகிதம்! - சீனாவின் புது கண்டுபிடிப்பு
PUBLISHED ON : நவ 16, 2025

இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நீர் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இச்சமயத்தில், கற்காகிதம் என்ற புது கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, சீனா.
இப்புரட்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு சிறப்பான தீர்வாக விளங்குகிறது. மரங்களை வெட்டாமலும், குறைந்த நீரைப் பயன்படுத்தியும் உற்பத்தி செய்யப்படும் இந்தக் காகிதம், காடு அழிப்பு மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறது.
இதன் தனித்துவமான உற்பத்தி முறையும், சுற்றுச்சூழல் நன்மைகளும், உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
கற்காகிதம், வழக்கமான மரக்கூழ் காகிதத்திற்கு மாற்றாக உருவாக்கப்படுகிறது. இதன் முதன்மை மூலப்பொருள், சுண்ணாம்புக் கல் ஆகும்.
இது, கிரானைட் உடைப்பின் போது கிடைக்கும் நுண்ணிய மணல் துகள்களிலிருந்து பெறப்படுகிறது. இத்துாளுடன், உயர் அடர்த்தி, 'பாலி எதிலீன்' என்ற 'பிசின்' சிறு அளவு கலந்து, காகிதத்திற்கு நெகிழ்ச்சித் தன்மையும், வலிமையும் உருவாக்கப்படுகிறது.
இந்த உற்பத்தி முறையில், மரங்கள், நீர் அல்லது 'ப்ளீச்சிங்' வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு கணிசமாக குறைகிறது.
வழக்கமான மரக்கூழ் காகித உற்பத்திக்கு, ஒரு டன்னுக்கு, 17 மரங்கள் வரை வெட்டப்படுகின்றன. மேலும், 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் நீர் தேவைப்படுகிறது.
இதற்கு மாறாக, கற்காகித உற்பத்தி, மரங்களை முற்றிலும் தவிர்த்து, ஒரு டன்னுக்கு வெறும், 20 லிட்டர் நீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதில் வேதிப் பொருட்கள் அல்லது அமிலங்கள் தேவை இல்லை. இதனால், நச்சு கழிவுநீர் அல்லது விஷ வாயுக்கள் வெளியேறுவதில்லை.
கற்காகிதம், நீர்ப்புகாத தன்மையும், கிழியாத வலிமையும் கொண்டது. இது, நீடித்து உழைக்க உதவுகிறது.
உதாரணமாக, உலகளவில் ஒரு ஆண்டுக்கு, ௪௦ கோடி டன் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது, இதற்காக, ௧௦லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன.
கற்காகிதத்தின் பயன்பாடு, இந்த எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும், இது, மட்கும் தன்மை கொண்டதாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு மேலும் நன்மை தருகிறது.
கற்காகிதத்தின் உற்பத்தி செலவு, மரக் காகிதத்தை விட அதிகமாக உள்ளது. மேலும், 'பாலி எதிலீன்' கலவையால், மறுசுழற்சி செய்வதும் சவாலாக உள்ளது.
இருப்பினும், சீனாவில் இதற்கான தொழில்நுட்ப மேம்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் மறுசுழற்சி செயல்முறை எளிதாகலாம்.
சவால்கள் இருந்தாலும், இந்த தொழில்நுட்பம் உலகளவில் பரவுவதன் மூலம், பசுமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
எம்.சித்தார்த்

