/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியம்!
/
உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியம்!
PUBLISHED ON : டிச 14, 2025

வட ஆப்ரிக்காவில் உள்ள, எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோ. இங்குள்ள, 'நைல்' நதிக்கரையில் அமைந்துள்ள, கிசா பிரமிடுகளுக்கு அருகில், 'கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்' சமீபத்தில் திறக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகமாகும்.
பழங்கால நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட, ஒரே மிகப்பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலான கட்டுமான பணிகளுக்குப் பிறகு, இந்த அருங்காட்சியகம், சென்ற மாதம், பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில், எகிப்திய அதிபர், அப்தெல் பத்தா எல்-சிசி உட்பட, பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். துவக்க விழாவின் போது, 'ட்ரோன்' ஒளிக்காட்சிகள் மற்றும் பிரமாண்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்த அருங்காட்சியகத்தின் மொத்தப் பரப்பளவு, 5 லட்சம் சதுர மீட்டர்கள். இது, வாடிகன் நகரத்தை விட பெரியது என்பதோடு, 70 கால்பந்து மைதானங்களுக்கு சமமான அளவும் கொண்டது.
சுமார், 1.2 பில்லியன் டாலர்கள் (1 பில்லியன் டாலர் - 100 கோடி ரூபாய்) செலவில் கட்டப்பட்டு, நவீன கட்டடக்கலை அம்சங்களுடன், பிரமிடு வடிவிலான நுழைவாயிலைக் கொண்டுள்ளது.
இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை, பண்டைய எகிப்து அரசர்களின் காலம் முதல், ரோமன் காலம் வரையிலான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை உள்ளடக்கி, முதல்முறையாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, 12 முதன்மை காட்சியறைகள் மற்றும் குழந்தைகள் அருங்காட்சியகம், பாதுகாப்பு மையம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மிக முக்கிய அம்சமாக, துட்டன்காமன் அரசரின் முழு சேகரிப்பான, 5,398 பொருட்களுடன், முதல் முறையாக ஒரே இடத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அவரது தங்க முகமூடி, சிம்மாசனம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
மேலும், 83 டன் எடையுள்ள, இரண்டாம் ராம்சஸ் அரசரின் பிரமாண்ட சிலை நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள, கூபு அரசன் பயன்படுத்திய, 4,600 ஆண்டுகள் பழமையான சூரியப் படகு, மற்றொரு சிறப்பம்சம்.
இந்த அருங்காட்சியகம், கிசா பிரமிடுகளுடன், நீண்ட, மூடிய நடைபாதை மூலம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், பிரமிடுகளில் இருந்து நடந்தோ அல்லது சிறிய 'பேட்டரி' வாகனத்தில் சென்றோ, அருங்காட்சியகத்தை அடையலாம். இதனால், பிரமிடுகளையும், அருங்காட்சியகத்தையும் ஒரே நாளில் எளிதாக பார்க்க முடியும்.
ஆண்டுக்கு, உலகெங்கும் இருந்து, 50 லட்சம் சுற்றுலா பார்வையாளர்களை எதிர்பார்க்கும் இந்த அருங்காட்சியகம், எகிப்தின் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுக்கும் என, நம்பப்படுகிறது.
இதன் மூலம், பழங்கால எகிப்திய பொருட்களை, வெளிநாடுகளிலிருந்து திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளையும், மேற்கொண்டுள்ளது அந்நாட்டு அரசு.
- எம். நிமல்

