PUBLISHED ON : அக் 19, 2025

ஹிந்திப்பட உலக நட்சத்திரங்களிடையே தீபாவளி, 'பார்ட்டி' ரொம்ப பிரபலம்.
ஹிந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நடத்தும், தீபாவளி, 'பார்ட்டி'யில், ஹிந்தி பட உலகை சேர்ந்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்வர். அங்கு விடிய விடிய சீட்டு கச்சேரியும் நடைபெறும்.
நடிகர் ஷாருக்கான் மற்றும் அவருடைய மனைவி, கவுரிகான் நடத்தும் பார்ட்டியில், செல்வ செழிப்பை காணலாம். அதனை ரசிக்கவே பலர் வருவர். பார்ட்டிகளை மிகச்சிறப்பாக நடத்துவதில் வல்லவர், கவுரிகான்.
தீபாவளி பார்ட்டிகளில், சில பிரபலங்கள், தங்களுடன் நடிக்கும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்துவதும் உண்டு.
நடிகை, ஷப்னா ஆஸ்மி மற்றும் ஜாவர் அக்தர் இணைந்து நடத்தும் தீபாவளி பார்ட்டி மிகவும் பிரபலம்.
நடிகை ஏக்தா கபூர், ஜுகுவில் உள்ள தன்னுடைய குடும்ப பங்களாவில், தீபாவளி பார்ட்டியை சிறப்பாக நடத்துவார். இது, விடிகாலை வரை தொடரும்.
இயக்குனர் பாரா கான், சிறுவயதில் மும்பை சொசைட்டி வீட்டில் வசித்தவர். இதனால், ஹிந்துக்களுடன் இணைந்து அவரும் தீபாவளி கொண்டாடுவார். தற்போது, இவரே தீபாவளி பார்ட்டியை அமர்க்களமாக நடத்துகிறார்.
நடிகை சோனாலி பிந்த்ரே மற்றும் கோல்டி பெல் நடத்தும் தீபாவளி பார்ட்டியில், இரவு முழுவதும் சீட்டுக் கச்சேரி கட்டாயம் இடம்பெறும்.
நடிகர் ஜாக்கி ஷெராப், பார்ட்டிகளையும், அதற்கான செலவுகளையும் தவிர்த்து, அவற்றை அனாதை குழந்தைகள் மற்றும் தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஸ்வீட், வெடி என எது கேட்டாலும் வாங்கி கொடுப்பார். 'எனக்கு உதவி செய்வதில் தான் ஈடுபாடு...' என்கிறார், நடிகர் ஜாக்கி ஷெராப்.
நடிகை அர்பிதா கான், தீபாவளி பார்ட்டியை, தீபாவளிக்கு முன்பே நடத்தி விடுவார். 'பார்ட்டியில் நிறைய பிரபலங்கள் கலந்து கொள்வதற்காக தான் முன் கூட்டியே நடத்துகிறேன்...' என்பார்.
நடிகர் அக்ஷய்குமார் சீட்டு விளையாடுவதில் வல்லவர். விடிய விடிய விளையாடச் சொன்னாலும் விளையாடுவார். ஏகமாய் பணத்தை ஜெயிக்கவும் செய்வார்.
பல நட்சத்திரங்கள், இரவு முழுவதும் தீபாவளி பார்ட்டிகள் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று, விடிய விடிய கலந்து கொண்டு, காலையில் தான் வீடு திரும்புவர்.
— ராஜிராதா