PUBLISHED ON : ஜன 11, 2026

ஜன., 17 - எம்.ஜி.ஆர், பிறந்த தினம்
கடந்த, 1970ல், சேலம், அலங்கார் தியே ட்டரில் எம்.ஜி.ஆர்., நடித்த, என் அண்ணன் என்ற படத்திற்கு, அவருக்காக வைக்கப்பட்ட, 'கட் அவுட்'டின் உயரம், 110 அடி. இந்த, 'கட் அவுட்' அடிக்க, 70 கிலோ ஆணிகள் பயன்படுத்தப்பட்டன
* மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், 1956ல், எம்.ஜி.ஆர்., நடித்த, அலிபாபாவும் 40 திருடர்களும் படம் தான் தமிழில், வெளிவந்த முதல் வண்ணப்படம். எம்.ஜி.ஆர்., தான் முதல் கலர் பட கதாநாயகன்
* கடந்த, 1956ல், வெளிவந்த, மதுரை வீரன் படம், 10 லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம் தான், எம்.ஜி.ஆரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. அவருடைய முதல் வெள்ளி விழா படமும், திரையிட்ட அத்தனை தியேட்டர்களிலும், 100 நாட்களை தாண்டி ஓடிய படமும் இது தான்
* நாட்டின் பிரதமரே, ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை திறந்து வைத்த பெருமை, எம்.ஜி.ஆரை மட்டுமே சேரும். கடந்த, 1965ல், அந்தமான் நிக்கோபார் தீவில், ' பணத்தோட்டம்' என்ற பெயரிலான எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தார், அப்போதைய பிரதமர், லால் பகதுார் சாஸ்திரி
* எம்.ஜி.ஆருக்காக, டி.எம்.சவுந்தர்ராஜன், முதன் முதலில் பாடிய பாடல், 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' இப்பாடல், 'சூப்பர் ஹிட்'டானது. இப்படம், ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஆறு மொழிகளிலும் வெற்றி கண்டது சரித்திர சாதனை. படம் : மலைக்கள்ளன்
* கடந்த, 1971ல், எம்.ஜி.ஆர்., நடித்த, நீரும் நெருப்பும் படம் சிவகங்கை அமுதா தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த போது, நிறைமாத கர்ப்பிணியான அவருடைய ரசிகை ஒருவர் படம் பார்க்க வர, தியேட்டரிலேயே அவருக்கு பிரசவ வலி வந்து, அங்கேயே குழந்தை பிறந்து விட்டது. இதை கேள்விப்பட்ட, எம்.ஜி.ஆர்., அந்த பெண்ணுக்கு, ஐயாயிரம் ரூபாயை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்
* ஆரம்ப காலங்களில், எம்.ஜி.ஆர்., வால்டாக்ஸ் ரோட்டில் குடியிருந்தார். அப்போது கொத்தவால்சாவடியில் கைதேர்ந்த சிலம்பு மாஸ்டரிடம் சிலம்பம் மற்றும் வாள் வீச்சு கற்றுக்கொண்டார்
* கடந்த, 1965ல், எம்.ஜி.ஆர்., நடித்த, ஆயிரத்தின் ஒருவன் ப டம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. 150 நாட்களுக்கு மேல் ஓடியது. அதே படம் மறுபடியும் 2014ல், 'ரீ- ரிலீஸ்' செய்யப்பட்டு, 190 நாட்கள் ஓடியது
* டிஎம்எக்ஸ் 4777 என்ற நீல நிற அம்பாஸிடர் காரை, எம்.ஜி.ஆருக்கு பரிசாக அளித்தவர், இன்று போல் என்றும் வாழ்க திரைப்படத்தின் தயாரிப்பாளர், லட்சுமணன்
* எம்.ஜி.ஆரின் முதல் படமான, சதிலீலாவதி படமும், 100வது படமான, ஒளி விளக்கு படத்தையும் தயாரித்தார், ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன்
* எம்.ஜி.ஆர்., நடித்து, இயக்கி, தயாரித்த, அடிமைப்பெண் படத்தில், எல்லா பாடல்களுமே செம, 'ஹிட்' ஆனது. அதில், 'தாயில்லாமல் நானில்லை...' என்ற பாடலுக்கு மட்டும், கே.வி.மகாதேவன், 52 மெட்டுகளைப் போட்டுக் காட்டினார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு எதிலும் திருப்தி இல்லை. கடைசியாக போட்ட, 53வது டியூன் தான் ஓ.கே., ஆகி, பதிவு செய்யப்பட்டது
* சென்னையில், கடந்த 1969ல், மெக்கனஸ் கோல்டு என்ற ஆங்கிலப்படம், தேவி தியேட்டரில், 100 நாட்கள் முன்பதிவு செய்யப்பட்டே ஓடியது. இது ஒரு சாதனை. இந்த சாதனையை முறியடித்தது, எம்.ஜி.ஆரின், உலகம் சுற்றும் வாலிபன் படம். தேவி பாரடைஸ் தியேட்டரில், 100 நாட்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டு ஓடியது
* எம்.ஜி.ஆர்., தான் நடிக்கும் காலத்தில் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம், 12 லட்சம் ரூபாய். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்திற்காக வாங்கினார்
* கடந்த, 1977ல், எம்.ஜி.ஆர்., முதன் முதலாக ஆட்சி பொறுப்பு ஏற்கும்போது, அவரை வரவேற்க, 20 லட்சம் தொண்டர்கள் கூடியிருந்தனர். இதுவரை அப்படி ஒரு கூட்டத்தை தமிழ்நாடு மட்டுமின்றி உலகமே பார்த்ததில்லை.
* எ ம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர், எம்.என்.நம்பியார். திரைப்படங்களில் தனக்கு எதிரியாக நடிக்கும், நம்பியார் தான் அவருடைய மிக நெருங்கிய நண்பர் என்பது பலரும் அறியாத உண்மை. அவருடைய பல முடிவுகள், சில முக்கியமானவர்களுடைய சந்திப்புகள் எல்லாம், நம்பியார் வீட்டில் தான் பேசி முடிவெடுக்கப்படும். எம்.ஜி.ஆர்., இல்லாமல், நம்பியார் வீட்டில் எந்த விசேஷமும் நடந்ததில்லை. நம்பியாரின் திருமணத்தில், எம்.ஜி.ஆர்., தான் மாப்பிள்ளை தோழர்.

