PUBLISHED ON : ஜூன் 14, 2026

ஜூன் 14 - உலக ரத்த தான தினம்
'ரத்த தானம், உயிர் தானம்' என்பதற்கு ஏற்ப, விபத்து மற்றும் அறுவை சிகிச்சை காலங்களில், ஒரு மனிதனின் உயிரைக் காக்கும் உன்னத பணியைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 14 அன்று, உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.
ஏ, பி, ஓ மற்றும் ஏபி போன்ற ரத்த வகைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் பிறந்த நாளை முன்னிட்டு, இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த, 2004-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் இந்நாளை அறிவித்தது.
தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்பவர்களைக் கவுரவிப்பதும், பாதுகாப்பான ரத்தத்தின் தேவையை உலகிற்கு உணர்த்துவதுமே இதன் நோக்கம்.
ஒருவர் தானம் செய்யும் ஒரு, 'யூனிட்' ரத்தத்திலிருந்து, பிரிக்கப்படும் சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் மற்றும் பிளாஸ்மா மூலம், மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்த தானம் செய்வது, பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
புதிய செல்கள் உருவாக்கம்: தானம் செய்த, 48 மணி நேரத்திற்குள் உடல் புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும். இது, உடலை இன்னும் சுறுசுறுப்பாக்கும்.
இதய ஆரோக்கியம்: உடலில் இரும்பு சத்தின் அளவைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
தேவையற்ற கொழுப்பு குறைதல்: தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கணிசமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலவச பரிசோதனை: ரத்த தானம் செய்யும்போது, ரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின் அளவுகள் இலவசமாகப் பரிசோதிக்கப்படுகின்றன. அத்து டன் எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதால், நம் ஆரோக்கிய நிலை குறித்து உறுதி செய்துகொள்ள முடிகிறது.
யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?
* 18 வயது முதல், 65 வயது வரை உள்ள, ஆரோக்கியமான எவரும் ரத்த தானம் செய்யலாம்
* உடல் எடை குறைந்தபட்சம், 45 கிலோ இருக்க வேண்டும்
* தொற்று நோய்கள் இல்லாத ஆரோக்கியமான நபராக இருக்க வேண்டும்
* ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், ரத்தம் தேவைப்படுபவர்களையும் தானம் செய்பவர்களையும் இணைக்க, மொபைல் போனில், பிரத்யேகமான செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும், ரத்த வங்கிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
இத்தினத்தில் பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அதிக முறை ரத்தம் வழங்கியவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி அரசு கவுரவிக்கிறது.
ரத்தத்தை ஆய்வகங்களில் செயற்கையாக தயாரிப்பது சுலபமல்ல; அது, மனிதனிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டியது. நாம் தானம் செய்த ரத்தம், நம் உடலில் சில நாட்களிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும் என்பதால், ரத்த தானம் செய்ய அச்சப்படத் தேவையில்லை.
நாம் வழங்கும் ரத்தம் ஒரு உயிரை காப்பாற்றும் என்பதை உணர்ந்து, ரத்த தானம் செய்ய நாம் அனைவரும் முன்வருவோம்!
பார்வதி ஓமனக்குட்டன்
