
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 45 வயது பெண். கணவர் வயது: 50. எங்களுடையது காதல் திருமணம். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கப்பலில், தகவல் தொடர்பு சாதனங்களின் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிகிறார், கணவர். ஆறு மாதம் தொடர்ந்து பணிபுரிந்தால், இரண்டு மாதம் விடுமுறை கிடைக்கும்.
நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன்.
என் கணவருக்கு, திடீரென குடிப்பழக்கம் ஏற்பட்டது. பணியில் கவனம் குறைந்ததால், அடிக்கடி விடுப்பு எடுப்பதுமாக இருந்தார். அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
மருத்துவரிடம் அழைத்து சென்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். குடிப்பழக்கம் ஓரளவு குறைந்தது. மீண்டும் பணிக்கு திரும்பினார்.
கொஞ்ச நாள் தான் இது தொடர்ந்தது. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. மது அருந்தும் பழக்கம் மீண்டும் தொற்றிக் கொண்டது. பணியில் இருக்கும் போது ஒழுங்காக இருப்பார். இரண்டு மாத விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தால், நாள் முழுக்க குடித்து, சுய நினைவின்றி விழுந்து கிடப்பார். டாக்டரிடம் போகலாம் என்றால் மறுத்து விடுகிறார்.
விபரம் தெரியும் வயதில் இருக்கும் குழந்தைகள், அப்பா என்றாலே வெறுத்து ஒதுங்கி போகின்றனர்.
இதற்கிடையில், என் மேலதிகாரி, கணவரின் நிலை அறிந்து, ஏதாவது முயற்சி செய்து, அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என, ஆறுதல் கூறினார்.
என்னை தினமும் தன் அறைக்கு அழைத்து, அறிவுரை கூறியதோடு, இரண்டு முறை வீட்டுக்கும் வந்து, கணவரிடம் பேசினார்.
அதிலிருந்து, கணவருக்கு, என் மீது சந்தேகம் வந்து விட்டது. மேலதிகாரியையும், என்னையும் சம்பந்தப்படுத்தி, அசிங்கமாக பேச ஆரம்பித்தார். வேலையை விட்டு விடலாம் என்றால், குடும்பம் நடத்தவும், குழந்தைகள் படிப்புக்கும் வருமானம் போதாமல் தவிக்க வேண்டும். கணவர் சம்பாதிக்கும் பணம், மதுவுக்கே செலவாகிறது.
இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வர, ஒரு நல்ல வழி சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
குடிநோயாளிகளுக்கு, தத்தம் மனைவியர் மீது சந்தேகம் ஏற்படுவது, சர்வ சாதாரணமாகி விட்டது.
குடிநோயாளிகளின் ஆண்மை, சுறுசுறுப்பு, புத்திகூர்மை மற்றும் நியாயமாய் சிந்திக்கும் திறன் ஆகியவை மங்கி விடுகிறது.
அவர்களை தாழ்வுமனப்பான்மை கவ்வி பிடிக்கிறது. பணி இடத்தில் சந்தேகம்; மனைவியின் மீது சந்தேகம். மொத்தத்தில், ஒரு குடிநோயாளிக்கு அவனை தவிர்த்து, உலகில் உள்ள அனைவர் மீதும் சந்தேகம்.
இதில், இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டும். தனக்கு கீழ் பணிபுரியும் ஓர் ஆணுக்கு, பிரச்னை என்றால், ஒரு மேலதிகாரி வீடு தேடி வந்து ஆறுதல் கூறுவாரா?
குடிநோயாளியின் மனைவி, விருப்பமான இரை என்ற எண்ணத்துடன், ஆறுதல் அனுதாப மாறு வேடம் போட்டிருக்கலாம், மேலதிகாரி.
'சார், என் கணவர் விஷயத்தில் உதவுவதாக நினைத்து, என் வாழ்க்கையில் அத்துமீற வேண்டாம். உங்கள் கருணைக்கு நன்றி. தயவுசெய்து எங்கள் குடும்ப விஷயங்களில் தலையிடாதீர்கள்...' என, கைக்கூப்பி, அவரிடமிருந்து விலகி நில்.
உன் வேலையை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டு விடாதே.
குடிநோயாளிகளுக்கான ஆலோசனை மையத்துக்கு, கணவரை அழைத்துப் போ.
குடியிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தை, கணவரின் மனதில் ஆழமாக விதை.
'அன்பு கணவரே! நம், 22 - -25 ஆண்டு காதல், என்றும் துளி குறையாது அடர்ந்தே இருக்கும். என்னை சந்தேகப்படாதீர்கள். குடும்பநலனுக்காகவும் குழந்தைகள் எதிர்காலத்துக்காகவும் குடிப்பழக்கத்தை விட்டொழியுங்கள். பீனிக்ஸ் பறவை போல உயிர்தெழுங்கள் கணவரே...' எனக்கூறு.
குடிப்பழக்கத்தை விட்டொழிக்க, நம்பிக்கை மிக முக்கியம். மது அருந்த ஆகும் செலவை குடும்பத்துக்கு செலவழிக்கட்டும். குடிக்காமல் இருக்கும் தனக்கு தானே, உன் கணவர் எதாவது பரிசளித்துக்கட்டும்.
போராட்டம் தானே வாழ்க்கை? எமனிடமிருந்து கணவர் சத்தியவான் உயிரை, சாவித்திரி மீட்டது போல, குடிப்பழக்கத்திலிருந்து கணவரை மீட்டெடு.
வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.