
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 27 வயது ஆண். பொறியியல் டிப்ளமோ படித்துள்ளேன். கார் தொழிற்சாலை ஒன்றில் பயிற்சியாளராக சேர்ந்துள்ளேன். என் அப்பா, 'எக்ஸ்போர்ட்' நிறுவனம் ஒன்றில், 'அக்கவுன்டன்ட்' ஆக, பணிபுரிகிறார். அம்மா இல்லத்தரசி. எனக்கு, ஒரு தங்கை இருக்கிறாள். கல்லுாரியில் படித்து வருகிறாள்.
நான் கல்லுாரியில் படித்த போது, என்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்தேன். இன்று வரை எங்கள் காதல் தொடர்கிறது.
ஒருநாள் நானும், என் காதலியும் பூங்கா ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது, என் வகுப்பில் படித்த ஒரு பெண் பார்த்து விட்டாள். மறுநாள் என்னை சந்தித்து, அவள் கல்லுாரி படிக்கும் போதிலிருந்தே என்னை காதலிப்பதாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னிடம் சொல்ல முடியவில்லை என்றும் கூறினாள்.
மேலும், இதற்காகவே, தனக்கு பார்த்த வரன்களை எல்லாம் தட்டி கழித்து வந்ததாக கூறி, 'என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. நீங்கள் மறுத்தால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று கூறினாள்.
நான் மறுத்து பேச, எதிரில் வந்த கார் முன் விழுந்து விட்டாள். நல்ல வேளை லேசான காயம் தான். மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்ற பின், அவள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்தேன்.
அதன் பின்னரும், என்னை தொந்தரவு செய்தாள். அவள் வேறு மதத்தை சேர்ந்தவள். நிச்சயம் என் பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். என் தங்கையின் திருமணத்துக்கு பின் தான் என் கல்யாணம்.
என் காதலியை மறக்க முடியாது; இப்பெண்ணையும் ஏற்றுக்கொள்ள முடியாது!
நான் என்ன செய்யட்டும் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
ஒரு தலைக்காதலில், 'சீனியாரிட்டி' உரிமை கோர முடியுமா? 'முதலில் வந்தவருக்கு முதலில் உணவு பரிமாறல்' என்கிற கோஷத்தை காதலில் அமுல்படுத்த முடியுமா?
நீண்ட நாட்களாக உருகிஉருகி உன்னை காதலித்தவள், தன் காதலை உரியகாலத்தில் உன்னிடம் வெளிப்படுத்தாதது ஏன்? அப்படி காதல் உள்ளத்துடன் உன்னுடன் அவள் பழகியிருந்தால் பேசி இருந்தால் கூட, அவளின் காதலை கண்டு பிடித்திருக்கலாம். வெளிப்படையாக அவள் தன் காதலை உன்னிடம் சொல்லாத போது, நீயும், அவள் காதலை ஏற்றுக் கொள்ளாத போது தனக்கு வரும் வரன்களை எந்த நம்பிக்கையில் தட்டிக்கழித்தாள்? அவள் தன் காதலை உரிய நேரத்தில் சொல்ல முடியாத படிக்கு அவளுக்கு என்ன சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்தது?
உன்னை உன் காதலியுடன் பார்த்த பின் தற்கொலை நாடகமும், உணர்வு மிரட்டலும் செய்கிறாள் என்றால், இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.
உன் காதலிக்கும், அவளுக்கும் முன் விரோதம் எதாவது இருக்கலாம். எனவே, உன் காதலியின் காதலை சீர்குலைக்க ஒரு சதுரங்க ஆட்டம் ஆடுகிறாளோ என்னவோ!
உன் காதலியிடம் அவளைப்பற்றி முழுமையாக விசாரி.
மொத்தத்தில் அந்த, 'பிளாக்மெயிலரை' பற்றி முழுமையான தகவல்களை சேகரி. உன் காதலை உன் பெற்றோரிடம் கூறி விட்டாயா? உன் காதலியை, நீ திருமணம் செய்ய உன் பெற்றோர் ஒப்புக்கொண்டனரா? ஒப்புக் கொண்டிருந்தால், உன் பெற்றோரிடம் புதிய, 'பிளாக்மெயிலரை' பற்றி கூறு.
உன் பெற்றோர், அந்த மோசடி பெண்ணின் பெற்றோரை சந்தித்து அவர்களது மகளின் துர்நடத்தையை விளக்கிச் சொல்லட்டும்.
அவர்கள், தங்கள் மகளுக்கு தகுந்த அறிவுரை சொல்லட்டும். தேவைப்பட்டால் மகளை தகுந்த மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை வழங்கட்டும்.
உன் காதலை வெளி உலகிற்கு கண்காட்சி ஆக்காதே.
உன் பெற்றோரை முடுக்கிவிட்டு, உன் காதலி வீட்டில் பெண் கேட்கச்சொல். காய்களை விவேகமாக நகர்த்தி, ஒரு சுபயோக சுபதினத்தில் உன் காதலியை மணந்து கொள்.
உனக்கு திருமணமான செய்தி கேட்டு சில நாட்கள் கொந்தளிப்பில் இருப்பாள் அந்த, 'பிளாக்மெயிலர்'. பின் யதார்த்தம் உணர்ந்து, 'சீச்சீ இந்த பழம் புளிக்கும்...' எனக்கூறி, உன் மீதான ஒருதலைக் காதலை உதறி விடுவாள்.
சம்சார சாகரத்தில் இனிதே பயணி.
வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.