
அன்புள்ள அம்மாவுக்கு -
நான், 29 வயது பெண். கணவர் வயது, 50. நான், அவருக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி, விவாகரத்து பெற்று சென்று விட்டார்.
என் கணவருக்கும், முதல் மனைவிக்கும், ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர். மகளுக்கு, 24 வயது. சமீபத்தில், அவளுக்கு, திருமணமாகி விட்டது. மகன் வயது, 19. கல்லுாரியில், டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். இவன் என்னிடம் நன்றாக பேசுவான்; பாசமாக இருப்பான்.
என் கணவரின் துாரத்து உறவினர் ஒருவர், எங்கள் அம்மாவுக்கும் உறவினர். அவர் சொன்னதை நம்பி தான், இவரை திருமணம் செய்து வைத்தனர், என் பெற்றோர்.
என் கணவர், தொடக்கப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வருகிறார். தன் முதல் மனைவிக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், மகள் திருமணத்துக்கு, என்னிடமிருந்த, 20 சவரன் நகையை வாங்கித்தான், திருமணத்தை நடத்தினார்.
நான், குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று, கருத்தடை ஆபரேஷன் செய்ய வைத்தார். சமீபத்தில், தன் முதல் மனைவியை, எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் ஒரு வீடு பார்த்து, குடி வைத்துள்ளார். தினமும் அங்கு சென்று வருகிறார். மகனையும், தன்னிடம் அழைத்துக் கொண்டார், முதல் மனைவி.
'என் எதிர்கால பாதுகாப்புக்கு, தேவையானதை செய்து கொடுங்கள்...' என்று கேட்டால், 'நான் இறந்ததும், நீயும் இறந்து விடு...' என்கிறார்.
நான் கொடுத்த, 20 சவரன் நகையையாவது திருப்பி கொடுங்கள் என்றால், அதையும் கொடுக்க மறுக்கிறார்.
என் பெற்றோரிடம் விஷயத்தை கூற, 'அவருடன் வாழ வேண்டாம். விவாகரத்து வாங்கி விடலாம். உனக்கு வேறு கல்யாணம் செய்து வைக்கிறோம்...' என்கின்றனர்.
கருத்தடை ஆபரேஷன் செய்து, இரண்டு ஆண்டுகளாகிறது. அதை மீண்டும் மாற்ற முடியுமா? நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி செய்தால், கணவர் கெடுத்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது.
எனக்கு நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.
- இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு -
சபலமான ஆண்களுக்கு எப்போதுமே, இரண்டு என்கிற எண்ணிக்கை மிகவும் பிடிக்கும். இரண்டு பெண்களை மணந்து கொள்வது ஆண்களின் மனக்கிறுக்கு. ஆண்கள் ஒரே நேரத்தில், இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முயன்று மண்ணை கவ்வுவர். இரண்டு மனைவிகளை மணந்தவன் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் ஜெயித்ததாக வரலாறு இல்லை.
சரிவர விசாரிக்காமல் ஒரு வயோதிகருக்கு, இரண்டாம் மனைவியாக நீ வந்தது கடைந்தெடுத்த முட்டாள் தனம். கணவரின் பேச்சைக் கேட்டு, நீ கருத்தடை செய்து கொண்டது, யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டதற்கு சமம். 20 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை முதல் தாரத்தின் மகள் திருமணத்திற்கு எடுத்துக் கொடுத்து, ஏமாந்திருக்கிறாய்.
பொதுவாக, இரண்டாம் தாரமாய் வாக்கப்படும் பெண்கள் பேராசை பேய்களாக முதல்தாரத்துக் குழந்தைகளை துன்புறுத்தும் ரத்தக்காட்டேரிகளாக சித்தரிக்கப்படுவர். உன் கதை தலைகீழாய் உள்ளது.
முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்தவர், எதற்கு முதல் மனைவியை தன் வீட்டுக்கு அருகில் குடிவைத்து, ஒரு கோடி ரூபாய் சொத்துகளை வாங்கித் தந்திருக்கிறார்?
காரணங்கள் இரண்டு:
முதலாவது, ஆத்திர அவசர கோபத்தில் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். ஆனாலும், முதல் மனைவி மீதான காதல் குறையவில்லை. மகள் மற்றும் மகன் மீதான அன்பு, முதல் மனைவி பக்கமும் மடைமாறி இருக்கிறது.
இரண்டாவது, முதல் மனைவி ராசியானவள். அவளால் தான் வசதி வாய்ப்புகள் வந்தன. அவளை விவாகரத்து செய்தபின் வசதி வாய்ப்புகள் குறைந்தன. மீண்டும் வசதி வாய்ப்புகளை பெருக்க அவளை அழைத்து வந்து அருகில் வைத்துக் கொண்டார். அவர் ஒரு ஜோதிட பைத்தியமாக இருக்கக்கூடும். இது ஒரு யூகமே.
அடுத்து, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்.
முதல் மனைவியை சந்தித்து பேசு. உன்னை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு, உன் கணவர் முதல் மனைவியை மீண்டும் மணந்து கொள்ளட்டும். மகளின் திருமணத்துக்கு கொடுத்த, 20 பவுன் நகையை திருப்பித்தரச் சொல். உன்னுடனான விவாகரத்துக்கு பிறகு, உனக்கு நஷ்ட ஈடாய், 10 லட்ச ரூபாய் கொடுக்கச் சொல். சமாதான உடன்படிக்கைக்கு முதல் மனைவி சம்மதிக்க மறுத்தால், காவல் நிலையத்தில் புகாரையும், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் மனுவையும் தாக்கல் செய்.
மருத்துவரை அணுகி, கருத்தடை ஆபரேஷனை மாற்ற முடியுமா என்று ஆலோசி.
மீண்டும் மறுமணம் செய்யும்போது, 'செகண்ட் ஹாண்ட்' மாப்பிள்ளை தேடாதே. உன் வயதுக்கு சமமான விதவனுக்கு கழுத்தை நீட்டு.
உனது வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் மலர வாழ்த்துகள்!
-- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

