
அன்பு சகோதரிக்கு -
நான், 65 வயது பெண்மணி. பணி ஓய்வு பெற்ற ஆசிரியை.
எனக்கு, 20 வயது இருக்கும் போது, என் அம்மா இறந்து விட்டார். அப்பா மற்றும் அண்ணன் பராமரிப்பில் இருந்தேன். பி.எட்., படித்தபோது, எங்கள் தெருவில் வசிக்கும் ஒருவர் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர், அழகாக, கம்பீரமாக இருப்பார். பட்டப்படிப்பு முடித்து, வேலை தேடிக் கொண்டிருந்தார், அவர்.
என் வீட்டை கடந்து போகும் போதெல்லாம், என்னைப் பார்த்து சிரிப்பார். எனக்கும் அவரை பிடித்திருந்தது. பார்வை பரிமாறிக் கொண்டதில் ஆரம்பித்து, அவ்வப்போது, ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொள்வதும் உண்டு.
நாங்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். எனவே, திருமணத்துக்கு தடை இருக்காது என்று நினைத்தேன். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது.
எங்கள் காதல் ஒரு ஆண்டு கூட நிலைக்கவில்லை. என் காதலை அறிந்து, என் வீட்டினர், 'அவனுக்கு வேலை வெட்டி ஏதுமில்லை. உன்னை வைத்து எப்படி காப்பாற்றுவான்?' என்று கேட்டு, வெளியூரில் இருந்த என் மாமா வீட்டுக்கு என்னை அனுப்பி விட்டனர்.
என் மாமாவும், எனக்கு நிறைய அறிவுரைகள் கூறி, படிப்பை தொடர செய்தார். அதே ஊரில் பள்ளியொன்றில் வேலையும் வாங்கிக் கொடுத்தார். ஆனால், என் காதலரை நினைத்து கலங்குவேன். என்னை கண்காணிக்க ஆள் ஒருவரையும் நியமித்தார், மாமா. அந்த ஆள், நான் எங்கு சென்றாலும், பின் தொடர்ந்து வந்து கண்காணிப்பார்.
இந்நிலையில், என் அப்பாவும், மாமாவும் சேர்ந்து, எனக்கு மாப்பிள்ளை தேடினர். ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து, எனக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.
என் கணவர், அன்பும், பண்பும் நிறைந்தவர். ஒரு கடுஞ்சொல் கூட கூறமாட்டார். அவரது அன்பில், என் பழைய காதலை மறந்து போனேன்.
சில ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊருக்கு வந்த எனக்கு, என் பிரிவால் என் காதலர், சிறிது காலம் பைத்தியமாக அலைந்து, சரியான சிகிச்சை அளித்ததில், மனம் தெளிந்ததாகவும், அதன் பின், நண்பர்கள் மூலம் நல்ல வேலை கிடைத்ததும், ஒரு பெண்ணை திருமணம் செய்து, அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் கிடைத்தது; நிம்மதி அடைந்தேன்.
என் கணவரோடு இனிய வாழ்க்கை வாழ்ந்து, பிள்ளைகளுக்கு திருமணம் செய்து, 40 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, பணி ஓய்வும் பெற்றேன். நான், பணி ஓய்வு பெற்ற, ஒரு ஆண்டு கடந்த நிலையில், என் கணவர் இறந்து விட்டார். வாழ்க்கையே வெறுத்து, நடைப்பிணமானேன்.
இந்நிலையில், என் சொந்த ஊரில் வசிக்கும் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு, என் பழைய காதலரை சந்திக்க நேர்ந்தது. அவரது மனைவி இறந்து விட்டதாகவும், மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகி, வெளியூரில் வசிப்பதாகவும், தற்சமயம் தான் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதன்பின் ஓரிரு முறை சந்தித்துக் கொண்டோம். ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க விரும்புகிறோம். அது நிச்சயம் காதல் இல்லை. முதுமையில் ஏற்படும் பரிவு மட்டுமே. ஆனால், சமூகம் அதை எப்படி பார்க்கும் என்றும் பயமாக இருக்கிறது. நிம்மதி இழந்து தவிக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள், சகோதரி.
— இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரி -
உங்கள் கடிதம், வங்க எழுத்தாளர், சரத்சந்திர சட்டர்ஜியின் நாவல் சுருக்கம் போல இருக்கிறது. உணர்வுப்பூர்வமான கடிதம். 40 ஆண்டு காலத்தை ஒரு பக்கத்தில் சுருக்கி சொல்லி விட்டீர்கள். உங்களுக்கும், உங்கள் காதலருக்கும் பலமான பிணைப்புகளோ, நெருக்கமான சந்திப்புகளோ இல்லை. வெறுமனே பார்வை பரிமாற்றமும், இரண்டொரு வார்த்தை பரிமாறல் மட்டுமே.
உங்கள் கணவருடனான, 40 ஆண்டு கால தாம்பத்யம், ஒரு வானவில் காதலை முழுமையாக மறக்கடிக்கவில்லையா?
உங்கள் மகன், மகள், பேரக்குழந்தைகள் என, ஒரு பாசவட்டத்தை நீங்கள் போட்டுக் கொண்டால் வாழ்க்கை வெறுக்காது.
ஆயிரம் இருந்தாலும், ஆயிரம் போனாலும் உங்கள் மனதில் ஒரு பழங்கால எதிர்பார்ப்பு அக்கா குருவி போல குறுக்கே பறக்கிறது போலும்.
இருபக்க கடமைகள் நிறைவேற்றம்-, இருபக்க வாழ்க்கைத் துணைகள் மரணம்- பரஸ்பரம் வெகு ஆழத்தில் ஒளிந்திருந்த காதலை வெளிக்கிளப்பி விட்டது. தப்பில்லை. இந்தக்காதல் இக்கணம் உடல் ரீதியானதல்ல; ஆன்ம ரீதியானது.
நீங்கள் இருவரும் இன்னும், 10 ஆண்டுகள் உயிருடன் இருப்பீர்களா? நல்லது.
ஒரு ஆண்டு நீங்களும், உங்கள் காதலரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாது, 'லிவ்விங் டு கெதர்' வாழ்க்கை வாழுங்கள். பரஸ்பரம் காயங்களுக்கு மருந்திடுங்கள்.
நீங்கள் அவருக்கு சமைத்துப் போடுங்கள். அவர் உங்கள் கைகளை பிடித்துக் கொண்டு வெளி உலகம் சுற்றி வரட்டும்.
உங்களிருவரின், 'லிவ்விங் டு கெதரை' இருதரப்பு, மகன் - மகள்கள் குடும்பம் அங்கீகரிக்கின்றனரா என, பாருங்கள்.
ஒரு ஆண்டு, 'லிவ்விங் டு கெதர்' வாழ்க்கை, உங்களுக்கு நினைத்த அளவு ஆறுதலையும், பேரன்பையும் அள்ளித் தருகிறதா என, அவதானியுங்கள்.
உங்கள் வயோதிகக் கூட்டணி உங்களுக்கு சவுகரியமாக இருந்தால், தொடரலாம்.
நீங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள். இறந்துபோன உங்கள் கணவரும், இறந்து போன உங்கள் காதலரின் மனைவியும் மானசீகமாக உங்களை ஆசீர்வாதிப்பர்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

