
அன்புள்ள அம்மாவுக்கு -
நான், 45 வயது ஆண். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். 12ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். தங்கைக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசிக்கிறாள். தம்பிக்கு இன்னும் திருமணமாகவில்லை. தற்சமயம், மளிகை கடையில் மாத வருமானத்திற்கு வேலை செய்து வருகிறேன்.
திருமணத்தில் சற்றும் ஆர்வமில்லாத எனக்கு, என் 34வது வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர், என் பெற்றோர். என் குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்காக அவளது அம்மா வீட்டிற்கு சென்ற என் மனைவி, குழந்தைக்கு ஒரு வயதாகியும் திரும்பி வரவில்லை.
நானும், என் பெற்றோரும் அழைக்க சென்றபோது, 'குழந்தைக்கு, மூன்று வயதாகட்டும் அனுப்புகிறோம்...' எனக் கூறினார், என் மாமியார். அதன்பின் நான் வெளிநாட்டு வேலைக்கு போனேன். சில காலம் வேலை பார்த்து விட்டு, திரும்பி ஊருக்கு வந்து, மனைவியையும், குழந்தையையும் அழைக்க சென்றபோது, 'உன்னுடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை. வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்...' என்று கூறி விட்டாள், என் மனைவி.
இதையடுத்து நான் மகளிர் காவல் நிலையத்தை அணுகி, புகார் அளித்தேன். அவர்களும் கூப்பிட்டு விசாரணை நடத்திய போதும், அதையே கூறி விட்டாள், என் மனைவி.
மேற்படி நான் எதுவும் சொல்லாமல் என் வீட்டிலேயே இருந்து விட்டேன். முறைப்படி கோர்ட்டில் வழக்கு போட்டு, விவாகரத்து ஆகிவிட்டது. பிள்ளை, என் மனைவியுடன் இருக்கிறான். அவனுக்கு இப்போது, 10 வயதாகிறது.
மேற்கொண்டு என்னை இரண்டாம் திருமணம் செய்யக்கோரி குடும்பத்தார் வற்புறுத்துகின்றனர்.
என் தம்பியோ குடி போதைக்கு அடிமையாகி சதா குடித்துவிட்டு, வீட்டில் பெற்றோரை மிகவும் மன வேதனைக்கு உள்ளாக்குகிறான். அவனுக்கும் திருமணத்தில் நாட்டம் இல்லை என்கிறான். எங்கள் குடும்பம் இந்த தலைமுறையோடு முடிந்து விடுமோ என்ற பயம் எனக்குள்ளே ஓடுகிறது.
எங்கள் குடும்பத்தையும், என்னையும் கவனிக்க மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என, தகுந்த பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- இப்படிக்கு, உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு -
திருமணத்தில் சற்றும் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறாய். தாமதமான திருமணம் மற்றும் -திருமணத்தில் ஆர்வமின்மை இந்த இரண்டும் உன் திருமண வாழ்வில் இரட்டை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டன.
பொதுவாக ஒரு மனைவி, தன் கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?
* சுமாரான ஆளுமை
* போதுமான சம்பாத்தியம்
* திருப்தியான தாம்பத்யம்
* ஆரோக்கியமான பரஸ்பர சுயசுத்தம்
* மனைவியின் இருப்பை அங்கீகரித்தல்
* மனைவியை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தல்
* மனைவியின் பெற்றோருடன், உறவினருடன் நல்லுறவு பேணுதல்
* மனைவியை, ஒரு தேவலோக பரிசு பொதியாய் பாவனை செய்வது ஆகியவை தான்.
மகனே! நீயோ அதிகம் படிக்கவில்லை. பெரிதாய் சம்பாதிக்கவில்லை. பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொண்டவன்.
உன் திருமணம் வெறும், 10 மாதங்கள் மட்டுமே உயிர்த்திருந்திருக்கிறது. திருமணமான முதல் நாளிலிருந்தே உன் மீது அதிருப்தியாய் இருந்திருக்கிறாள், உன் மனைவி.
நீ, பிரம்மச்சாரி வாழ்க்கையில் ஊறி திளைத்தவன்; திருமண வாழ்வின் மகிமை தெரியாதவன். உன்னை விமர்சிக்கிறேன் என, வருத்தப்படாதே. நான் யதார்த்தத்தை மட்டுமே கூறுகிறேன். ஒரு திருமணத்தை வெற்றிகரமானதாக்க வேண்டும் என்றால், ஆணின் தரப்பில் ஓர் ராஜமந்திரம் கலந்த சாதுர்யம் தேவை.
முதல் திருமணத்தில் புறமுதுகிட்டு ஓடி வந்தவனுக்கு, இரண்டாவது திருமணமா? புதிதாக ஒரு பெண்ணின் சந்தோஷத்தை கெடுக்க உன் குடும்பத்தார் தீர்மானித்து விட்டனரா? திருமணம் உனக்காக இல்லாமல், உன் குடும்பத்தாருக்காக என்றால், மீண்டும் தோல்வியே. இரண்டாவது திருமணம் உனக்கு சரிப்பட்டு வராது. மீதி வாழ்நாளை தன்னந்தனியனாக வாழ்ந்து விடு.
உன் தம்பிக்கு வயது, 40. குடிநோயாளி. அவனுக்கு திருமணம் எதற்கு? அண்ணனும், தம்பியும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதால், சமூகத்துக்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடாது.
உன் தங்கைக்கு இரு குழந்தைகள். உனக்கு விவாகரத்து ஆன மனைவி மூலம் ஒரு மகன். பின்னெப்படி உன் குடும்பம் வாரிசு இல்லாமல் முடிந்து விடும்!
உன் மகனின் கல்வி செலவுக்கு, பெரும்பணம் சேமித்து, அவனுக்கு வழங்கு. மனைவி மறுமணம் செய்து கொண்டால் மனதார வாழ்த்து!
- -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

