
அன்புள்ள அம்மாவுக்கு,
இருபத்து ஒன்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இளைஞன் நான். வீட்டில் கடைக்குட்டி. மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் வேலைக்காக முயற்சி செய்தேன், கிடைக்கவில்லை. நண்பர் மூலமாக வங்கிப் பணியில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. சம்பளம் குறைவாக இருந்தாலும், வாழ்க்கையை முன்னேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
அரசு வேலைக்கும் தொடர்ந்து படித்து வருகிறேன். எந்தவித தீய பழக்கமும் இல்லை. சிறுவயதில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக தலைமுடி உதிர்ந்து விட்டது. அதைப் பற்றிய மன வருத்தம் எனக்குள் உள்ளது. இருந்தாலும், நல்ல வாழ்க்கை வரும் என்ற நம்பிக்கையை விடவில்லை.
நான் விரும்பும் பெண், வீட்டின் முதல் பெண். வயது, 29. இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அரசு வேலையில் இருக்கிறாள். என்னைப் பற்றி தெரிந்தே என்னை காதலிக்கிறாள். நானும், அவளும் ஒரே ஊர், தெரு, ஒரே ஜாதி. ஒரே ஜாதியில் உட்பிரிவு மட்டும் வேறு வேறு. ஆனால், அவள் வீட்டில், என்னுடைய ஜாதி உட்பிரிவு, அரசு வேலையில் இல்லாதது, அவள் என்னை விட, நான்கு மாதம் பெரியவள் போன்ற விஷயங்களை காரணமாக்கி தடை போடுகின்றனர்.
அவளின் பெற்றோரும், அவளது உடன் பிறந்த தங்கையும், எங்கள் விஷயத்திற்கு பல எதிர்மறை கருத்துகளை அவளிடம் கூறி, மிகுந்த வலிகளை ஏற்படுத்துகின்றனர். வீட்டிலும், சொந்தத்திலும் பெரிய ஆதரவில்லாத நிலையில் இருக்கிறாள், என் காதலி.
சிறுவயது தோழியே வாழ்க்கை துணையாக அமைந்து விட்டால், வாழ்க்கை நன்றாக இருக்கும் அல்லவா! நான் காதலிக்கும் பெண்ணுக்கும், எனக்கும், தனிப்பட்ட முறையில் நல்ல புரிதல் உள்ளது. ஆனால், திருமணம் என்ற விஷயம் பேசப்படும் போதெல்லாம் மனக்கசப்பும், வாக்குவாதமும், முரண்பாடுகளும் தொடர்ந்து வருகின்றன.
என்னை, வேறு வேலைக்கு முயற்சி செய்ய சொல்கிறாள். தலையில் முடி வளர, மருத்துவர் ஆலோசனை பெற சொல்கிறாள். 'நீ நன்றாக படிச்சிருந்தா, இப்போ அரசு வேலையில் இருந்திருப்பாய்; நமக்கு கல்யாணமும் நடந்திருக்கும்...' என்றும் கூறுகிறாள்.
அவளின் பெரிய எதிர்பார்ப்பு, நானும் அரசு வேலையில் இருந்தால், அவள் வீட்டில் பேச எளிதாக இருக்கும் என்பதே. என்னுடைய தோற்றம் பற்றிய அவளது சில வார்த்தைகள் எனக்கு, மன ரீதியாக அதிக வலியைத் தருகின்றன. 'திருமண நேரத்தில் தலைமுடி இருந்தால் நல்லாருக்கும், வெளியே சென்றால் மற்றவர்கள் எப்படி பார்ப்பர்...' என்றும் கேட்கிறாள்.
நானும், நல்ல வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தவுடன் மாற தயாராக இருக்கிறேன்.
இந்த சூழ்நிலையில், அவளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது நல்ல வார்த்தைகளும், ஆதரவும், ஊக்கமும் மட்டுமே. அதுவே, என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.
ஆனால், அவளது சில வார்த்தைகள் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
'இந்த தனியார் பணியிலேயே இருந்து, இந்த கல்யாணம் நடந்தாலும், அரசு வேலை வரும் வரை நான் திருப்தியாக இருக்க மாட்டேன்...' என்றும் கூறுகிறாள்.
தனிப்பட்ட முறையில் அவளுக்கு பிரச்னை இல்லை; ஆனால், குடும்பம் என்று வரும் போது, அவள் யோசிக்கிறாள். நானும், அவள் குடும்பத்துக்கு எதிரானவனும் இல்லை.
மிகுந்த மனச் சுமையுடன் இருக்கிறேன்.
நாங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் ஆலோசனை எங்கள் இருவருக்கும் ஒரு தீர்வை தரும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு, உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு,
உன் பிரச்னைகளை புரிந்து கொண்டேன்.
முடி உதிர்வை தடுக்க முட்டை, மீன், கீரை, பேரீச்சை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம். ரோஸ்மேரி தலை மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம் குறைக்கலாம். வாரம் ஒரு முறை, 'ஹேர் மாஸ்க்' பயன்படுத்தலாம். தேவையான நீர் அருந்துதலும், போதுமான துாக்கமும் வேண்டும்.
நீ, எதாவது ஒரு, 'கோச்சிங் சென்டர்' மூலம், பயிற்சி பெற்று பொதுத்துறை வங்கிகள் நடத்தும் அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதலாம்.
நீ, ஐ.பி.பி.எஸ்., எஸ்.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்வுகள் எழுதலாம்.
சரி, இப்போது உன் காதலுக்கு வருவோம்...
உன் காதலிக்கு ஒரு மறைவான உள்நோக்கம் இருக்கிறது. அவளுக்கு குறைந்தபட்சம் பொருளாதார பாதுகாப்பும், புற அழகும் வருங்கால கணவரிடம் தேவை.
'உனக்கு தலையில் முடி இல்லை... உனக்கு தலையில் முடி இல்லை...' என, அவள் புலம்புவது கொஞ்சநஞ்சம் இருக்கும் உன் தலைமுடிகளை உதிர செய்து விடும். அவளின் நிர்பந்தத்திற்காக, நீ தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க இயலாது.
உன் காதலி எந்த காலத்தில் இருக்கிறாள்? எனக்கு தெரிந்த, தலைகேசம் முற்றிலும் இழந்த இளைஞர்கள் தத்தம் காதல் மனைவிகளுடன் சந்தோஷ வாழ்க்கை வாழ்கின்றனர்.
என்னைக் கேட்டால் இந்த பெண்ணின் காதல் உனக்கான நிரந்தர பின்னடைவே.
அவளுடன் சுமூகமாக பேசி, பிரிந்து விடு. பிரிந்த பின் நிம்மதியாக எந்த அக, புற நிர்பந்தமும் இல்லாமல், வங்கித்தேர்வுகள் எழுது. பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து, அமைதி பெறு.
வாழ்த்துகள்!
-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

