PUBLISHED ON : மே 03, 2026

அன்பு சகோதரிக்கு,
நான், 48 வயது பெண். எனக்கு ஒரு தம்பி உள்ளான். என் கணவர் வயது, 55. காவல் துறையில் உதவி ஆய்வாளர். எங்களுக்கு மூன்று பெண்கள். மூத்த இரு பெண்களுக்கும் திருமணமாகி விட்டது.
இந்நிலையில், என் மூத்த வயதுடைய ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார், கணவர். அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகனும் இருக்கிறான்.
பெண்களின் படிப்பு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்து, என் அப்பாவின் ஆதரவு இருந்ததால், ஓரளவு சமாளித்தேன். என் இரு மகள்களின் திருமணத்தை கூட, என் அப்பாவின் ஆதரவில் தான் நடத்தி முடித்தேன். மகள்களின் திருமணத்துக்கு கூட, விருந்தினர் போல் தான் கலந்து கொண்டார், கணவர்.
அவ்வப்போது அப்பெண் வீட்டுக்கு சென்று வந்தவர், இப்போது, நிரந்தரமாகவே அப்பெண்ணுடனே தங்கி விட்டார். அப்பெண்ணின் கணவர், என் கணவரின் மிரட்டலுக்கு பயந்து, எங்கோ சென்று விட்டாராம்.
தன் குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல், அடுத்தவர் மனைவிக்கும், அவள் மகனுக்கும் வாரி வழங்கும் கணவரைப் பற்றி, அவரது உயரதிகாரிகளிடம் புகார் செய்தும் பயனில்லை.
கடைசி பெண்ணின் படிப்பு முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. எங்களுக்கு சொந்தமாக வீடு மட்டுமே உள்ளது. சேமிப்பு எதுவும் இல்லை. மூன்றாவது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
திருமணமாகி போன இரு மகள்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் பிறந்த வீட்டு முறை ஏதும் செய்ய முடியாமல் தவித்து வருகிறேன்.
கணவரின் பணி ஓய்வுக்கு பின் கிடைக்க வேண்டிய பண பலன்களை அப்பெண்ணுக்கே கொடுக்க போவதாக கூறுகிறார். மகள்களுக்காக எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறேன். என் அப்பாவுக்கும் வயதாகி விட்டது. தம்பியை தொந்தரவு செய்யக்கூடாது என்பது என் எண்ணம். அவனுக்கும் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.
நான் என்ன செய்யட்டும் அம்மா.
— இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு,
உன் புகாரின் அடிப்படையில், உன் கணவர் மீது அவரது உயரதிகாரிகள் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, உன் கணவரின் குற்றத்தில் அவர்களும் உடந்தை என்பதை அப்பட்டமாக்குகிறது.
தொடர்ந்து முயற்சித்தால், உன் கணவரின் கோட்டையை துவம்சம் பண்ணி விடலாம்.
உள்ளூர் மேலதிகாரி (ஆய்வாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர்) நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நேரடியாக அதற்கு அடுத்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகளை அணுகலாம்.
உன் கணவரின் கள்ளக்காதல் குறித்த ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் இருந்தால், அவற்றை புகார் கடிதத்துடன் இணைத்து, காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கலாம். உடன் ஒரு பெண் வக்கீலை அழைத்து செல்லலாம்.
நீ மாநகரப் பகுதியில் இருந்தால், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கலாம். அல்லது மாநில அளவில் காவல்துறை தலைவர் டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள புகார் பிரிவு மூலம் உன் புகாரை பதிவு செய்யலாம்.
காவல்துறையினரின் முறையற்ற நடத்தைகள் குறித்து விசாரிக்க, தமிழ்நாடு காவல் புகார் ஆணையம் இருக்கிறது. மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் இங்கு புகார் அளிப்பது பலன் தரும்.
cmhelpline.tnega.org இணையதளம் அல்லது 1100 எண்ணை தொடர்புகொண்டு, உன் புகாரை பதிவு செய்யலாம். புகார் நேரடியாக தலைமை செயலக பார்வைக்கு போகும். உடனடி நடவடிக்கை எடுப்பர்.
எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஒரு வழக்கறிஞர் மூலம் மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ, 'ரிட்' மனுதாக்கல் செய்து, உன் கணவரின் குற்ற நடத்தையை விசாரிக்க செய்யலாம். குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து விவாகரத்தும், ஜீவனாம்சமும் பெறலாம். கள்ளக்காதல் குற்றவியல் குற்றமல்ல என்றாலும், விவாகரத்து பெற வலுவான ஆதாரமாக அது இருக்கும்.
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978ன்படி, குடும்பம் என்பதில் சட்டப்பூர்வமான திருமணம் செய்து கொண்ட மனைவி மட்டுமே அடங்குவர்.
ஓர் அரசு ஊழியர், தன் குடும்ப ஓய்வூதியத்திற்கு சட்டப்பூர்வமான மனைவியை விடுத்து, கள்ளக்காதலியை வாரிசாக நியமிக்க முடியாது. சும்மா மிரட்டுகிறார் உன் கணவர்.
கணவரிடமிருந்து, ஜீவனாம்சம் கோரி, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா பிரிவு 144ன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
அவர் கள்ளக்காதலியை முறையாக திருமணம் செய்தால், அது இருதார மணம் என்ற குற்றத்தின் கீழ்வரும். அதற்கு, ஏழு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்.
கள்ளக்காதல் அல்லது திருமணபந்தம் மீறிய உறவு என்பது அரசு ஊழியருக்கு பொருத்தமற்ற நடத்தை என, கருதப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பர். தற்காலிக பணி நீக்கம் அல்லது பணியிடமாற்றம் நடக்கும்.
பயப்படாதே. துணிந்து செயல்படு... வெற்றி உனதே.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
